பொது

எம்எச்17: குற்றவாளி ரஷ்யாவை விட்டு வெளியேறினால் சிறை காத்திருக்கும்

16/07/2024 07:18 PM

நெதர்லாந்து, 16 ஜூலை (பெர்னாமா) -- மலேசியா ஏர்லைன்ஸ் விமானம், எம்எச் 17-ஐ சுட்டு வீழ்த்திய வழக்கு விசாரணையில் தலைமையேற்ற முன்னாள் அரசு தரப்பு துணை வழக்கறிஞர், டிக்னா வான் போட்ஸெலர் 298 பயணிகளுக்கு மரணத்தை ஏற்படுத்தியதற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மூன்று ஆடவர்களுக்கு நினைவூட்டல் விடுத்துள்ளார்.

ரஷ்யாவை விட்டு அம்மூவரும் வெளியேறினால், அவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவர் என்று வடக்கு ஹாலந்தின் தலைமை அரசு வழக்கறிஞரான அவர் எச்சரித்துள்ளார்.

ரஷ்யா தனது சொந்த குடிமக்களை அனுப்பாததால், நெதர்லாந்து அரசாங்கமும் அம்மூவரையும் நாட்டிற்கு ஒப்படைக்கவோ அல்லது சரணடையவோ கோரவில்லை என்றும் போட்ஸெலர் கூறினார்.

“இருப்பினும், அவர்கள் (குற்றம் சாட்டப்பட்டவர்கள்) ரஷ்யாவை விட்டு வெளியேறினால், அவர்கள் கைது செய்யப்பட்டு நெதர்லாந்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள். ஆனால், எப்பொழுதும் காலத்தில் மாற்றங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன். முக்கியமான விஷயம் என்னவென்றால், அரசு தரப்பு வழக்கறிஞர் அலுவலகம், நாங்கள் அவசரப்பட மாட்டோம். நாங்கள் இங்கேயே காத்திருப்போம்,“ என்றார் அவர்.

நெதர்லாந்து, ஹார்லெமில் உள்ள "Noord-Holland" அரசு தரப்பு வழக்கறிஞர் அலுவலகத்தில் நடைபெற்ற எம்.எச்17 பயண நிகழ்ச்சியின்போது மலேசிய செய்தியாளர்களிடம் பேசிய போட்ஸெலர் அவ்வாறு தெரிவித்தார்.

எம்.எச்17 விமானத்தை சுட்டு வீழ்த்திய குற்றச்சாட்டில் குற்றவாளிகள் என கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு ரஷ்யர்களுக்கும் ஒரு உக்ரேனியருக்கும், நெதர்லாந்து நாட்டின் ஹி ஹக் மாவட்ட நீதிமன்றம், 2022-ஆம் ஆண்டு நவம்பர் 17-ஆம் தேதி ஆயுள் தண்டனையை விதித்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)