உலகம்

வெளிநாட்டுச் செய்திகளின் தொகுப்பு 16/07/2024

16/07/2024 07:28 PM

வாஷிங்டன், 16 ஜூலை (பெர்னாமா) -- அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அந்நாட்டு அதிபர் தேர்தலில் போட்டியிடவிருக்கும் தமது முடிவில் உறுதியாக இருப்பதாக திங்கட்கிழமை என்பிசி செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப் மீதான கொலை முயற்சியைத் தொடர்ந்து ஒரு குறுகிய இடைவெளிக்குப் பிறகு, பைடனும் அவரின் மறுதேர்தல் குழுவும் பிரச்சாரத்தை மீண்டும் தொடங்கத் தயாராகி விட்டனர்.

இந்நிலையில், பைடன் அப்பதவிக்கு போட்டியிடுவதற்கான அவரின் தகுதி குறித்து கேள்விகள் எழுந்துள்ள வேளையில் அவர் தன்னை தற்காத்து அந்த முடிவை அறிவித்துள்ளார்.

மில்வாக்கி, அமெரிக்கா

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் துணை அதிபர் வேட்பாளரை அமெரிக்க முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அதிபர் பதவிக்கான தேர்தலில் டிரம்ப் களத்தில் உள்ள நிலையில், துணை அதிபர் பதவிக்கு ஜேடி வென்ஸ் போட்டியிடுவார் என்று டிரம்ப் திங்கட்கிழமை தெரிவித்தார்.

இதனிடையே, கொலை முயற்சிக்குப் பிறகு, அமெரிக்க முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப் திங்கட்கிழமை குடியரசுக் கட்சியின் மாநாட்டு மண்டபத்திற்குள், வலது காதில் துணியுடன் மூடப்பட்டிருக்கும் நிலையில் நுழைந்தார்.

குடியரசு கட்சியின், 2024-ஆம் ஆண்டுக்கான அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்பை மாநாட்டு மண்டபத்திற்குள் அவரின் ஆதரவாளர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

காத்மாண்டு, நேபாளம்

நேபாளத்தின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட கட்க பிரசாத் ஒலி, காத்மாண்டுவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

நேபாளத்தின் மிகப் பெரிய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான அவர், ஞாயிற்றுக்கிழமை முந்தைய கூட்டணி அரசாங்கத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து பிரதமராக நியமிக்கப்பட்டார்.

அந்த ஹிமாலய நாட்டின் பிரதமராக அவர் பதவியேற்பது இது நான்காவது முறையாகும்.

அவர் நியமித்த இரண்டு துணை பிரதமர்களும் 19 அமைச்சர்களும் அவருடன் இன்று பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

சுர்க் ரோட், ஆப்கானிஸ்தான்

நேற்று, கிழக்கு ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த கனமழையுடன் கூடிய புயலில் ஏறக்குறைய 35 பேர் பலியானதை தலிபான் உறுதிப்படுத்தியது.

அதோடு, நங்கர்ஹர் மாகாணத்தில் உள்ள மக்கள் பலர் பலத்த காயங்களுக்கு ஆளாகியுள்ளதாக, தகவல் மற்றும் கலாச்சார துறையின் மாகாண இயக்குனர் செடிகுல்லா குரைஷி தெரிவித்தார்.

சுர்க் ரோட் மாவட்டத்தில் வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 போர் உயிரிழந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் பெண்கள் உட்பட குழந்தைகள் இருப்பதாகவும், சீரற்ற வானிலை காரணமாக மாகாணத்தில் கட்டிடங்களும் விவசாய நிலங்களும் சேதமுற்றதாகவும் அவர் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)