பொது

MIROS ஊழியர்களின் நோன்புப் பெருநாள் சிறப்பு உதவித் தொகை விவகாரம் தீர்க்கப்படும்

17/04/2024 07:53 PM

புத்ராஜெயா, 17 ஏப்ரல் (பெர்னாமா) -- நோன்புப் பெருநாள் சிறப்பு உதவித் தொகையான 500 ரிங்கிட்டைப் பெறாத மலேசிய சாலை பாதுகாப்பு ஆய்வு கழகமான MIROS ஊழியர்களுக்கு, அத்தொகை நிச்சயம் வழங்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர், அந்தோணி லோக் உத்தரவாதம் அளித்துள்ளார்.
  
இவ்விவகாரம் தொடர்பில், அமைச்சு தகுந்த நடவடிக்கையை மேற்கொள்ளும் என்றும் அவர் உறுதியளித்தார்.

அந்த சிறப்பு உதவித் தொகை வழங்குவது தொடர்பில் MIROS-சின் இயக்குநர் வாரியத்தின் முடிவுக்கு காத்திருப்பதாக நிர்வாகத் தரப்பு தமது 200 ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியதாக தகவல் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

அத்தொகையை வழங்குவதற்கான தேதி ஒத்திவைக்கப்படுவதாகவும், MIROS இயக்குநர் வாரியத்தின் ஒப்புதலுக்கு உட்பட்டது என்றும் அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கிரேட் 56 மற்றும் அதற்கு கீழ் உள்ள அரசாங்க ஊழியர்களுக்கு,  நோன்புப் பெருநாள் சிறப்பு உதவித் தொகையாக 500 ரிங்கிட்டை வழங்கவிருப்பதாக ஏப்ரல் முதலாம் தேதி பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்திருந்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)