பொது

தெலுக் இந்தானில் கோலாகல சித்ரா பௌர்ணமி கொண்டாட்டம்

23/04/2024 08:07 PM

தெலுக் இந்தான், 23 ஏப்ரல் (பெர்னாமா) -- தைப்பூசம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், பங்குனி உத்திரம் போன்று முருகப் பெருமானுக்கான சிறப்பு தினங்களில் சித்ரா பௌர்ணமி இடம் பெற்றுள்ளது.

சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்தோடு சேர்ந்து வரும் பெளர்ணமி திருநாளான இன்றைய தினத்தில் நாட்டின் பல பகுதிகளில் சித்ரா பௌர்ணமி திருநாள், வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நாட்டில் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான 150 ஆண்டு பழைமை வாய்ந்த பேராக், தெலுக் இந்தான், நகரத்தார் ஶ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

விடியற்காலை 4.30 மணி தொடங்கியே பக்தர்கள் பால்குடம், காவடிகள் என தங்களின் நேர்த்திக் கடனை செலுத்தத் தொடங்கினர்.

அதிகாலை 5.00 மணி தொடங்கி காலை 7.00 மணி வரை நடைபெற்ற பாலாபிஷேகத்திற்குப் பின்னர் காலை 7.30 மணிக்கு ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

அதைத் தொடர்ந்து, பிற்பகல் 1.00 மணிக்கு ஆலயத்தின் சார்பில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் பரிமாறப்பட்டது.

இன்றிரவு வரை ஆலயத்திற்கு அதிகமான பக்தர்கள் வருகைப் புரிவார்கள் என்று கணிக்கப்படுவதாக ஆலய நிர்வாகம் கூறியது.

பேராக் மாநிலத்தைத் தவிர்த்து வெளி மாநிலங்களிலிருந்தும் அதிகமான பக்தர்கள் இத்திருவிழாவில் கலந்து கொண்டதை காண முடிந்தது.

"இந்த முறை திருவிழா வெகு விமரிசையாகவும் நேர்த்தியாகவும் நடைபெற்றது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இவ்வாண்டு பக்தர்களும் அதிகமாக காணப்பட்டதாக கிருஷ்ணன் சுப்பிரமணியம், சுசிலா கண்ணன், மாலதி கண்ணன் ஆகியோர் தெரிவித்தனர். 

இவ்விழாவிற்கு பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ. சிவநேசன், பாசிர் பெடாமார் சட்டமன்ற உறுப்பினர் வூ கா லியோங் ஆகியோரும் சிறப்பு வருகை புரிந்தனர்.

அடுத்த ஆண்டுக்குள், இவ்வாலயத்தின் எதிர்புறம் உள்ள சாலைக்கு, ஜாலான் தெண்டாயுதபாணி என்று பெயர் சூட்ட நடவடிக்கை எடுப்படும் என்று பேசிய பேரா மாநில இந்திய விவகாரங்களுக்கான தலைவருமாகிய சிவநேசன் கூறினார்.

இத்திருநாளை முன்னிட்டு ஆலயத்தைச் சுற்றிலும் சுமார் 200-க்கும் மேற்பட்ட கடைகள் போடப்பட்டிருந்தன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)