சிறப்புச் செய்தி

இணைய வர்த்தகத்தில் இனியும் ஏமாற வேண்டாம்; சட்டங்களைத் தெரிந்து தெளிவோம்

29/07/2024 09:08 PM

கோலாலம்பூர், 29 ஜூலை (பெர்னாமா) -- உலகளவில், பத்தில் எழுவர் இணைய வர்த்தகத்தில் போலியான மற்றும் தரம் குறைந்த பொருள்களை வாங்கி ஏமாறுவது,  கடந்தாண்டில் அமெரிக்கா, மிச்சிகன் ஸ்டேட் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

இதனால், உலக பொருளாதாரத்தில் ஆண்டுக்கு சுமார் 50,000 கோடி அமெரிக்க டாலர் இழப்பும் ஏற்படுகிறது.  

மலேசியாவிலும் இச்சூழல் உண்டாவதை மறுப்பதற்கில்லை என்றாலும் அதனை சட்ட ரீதியாக கையாள்வதற்கான வழிவகைகளை விவரிக்கின்றார் வழக்கறிஞர் கார்த்திகேசன் சண்முகம். 

கிட்டத்தட்ட அனைத்து வகையிலான பொருள்களும் இணையத்தில் போலியாக விற்கப்படும் நிலையில், உணவுகள், பானங்கள், ஆடைகள், காலணிகள், மருந்துகள், அழகுசாதனப் பொருள்கள், மின்னணுவியல், வாகன உபரி பாகங்கள், பொம்மைகள் மற்றும் நாணயம் ஆகியவற்றின் இணைய பரிவர்த்தனைகளிலேயே அதிகமான போலிகள் ஏற்படுகின்றன. 

இப்படி இருக்க, நமது நாட்டில் இச்சிக்கலை கவனிக்கும் சட்டங்கள் இருப்பதை வழக்கறிஞர் கார்த்திகேசன் சண்முகம் இவ்வாறு தெளிவுப்படுத்தினார். 

''சராசரியாக ஒரு பொருளின் தரத்தை ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில்தான் அது இருக்க வேண்டும். சமூக ஊடகங்களில் ஒரு பொருளின் தரத்தைப் பற்றி பேசும்போது அதன் தரத்தை உறுதிபடுத்தும் சட்டமும் உள்ளது. அதனையும் அவர்கள் தெரிந்த வைத்திருக்க வேண்டும். எனவே, விளம்பரப்படுத்துவது போலவே அதன் தரமும் இருக்க வேண்டும்,'' என்றார் அவர். 

எனவே, தங்களிடம் வந்து சேர்ந்த பொருள்கள் தரமாக இல்லை என்றாலோ அல்லது போலி என்று தங்களுக்கு தெரிய வந்தாலோ பயனீட்டாளர் பாதுகாப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கலாம் என்றும் கார்த்திகேசன் பெர்னாமா செய்திகளிடம் விளக்கினார்.

''பயனீட்டாளர் பாதுகாப்பு நீதிமன்றத்தில் அவர்கள் புகாரளிக்கலாம். 1999-ஆம் ஆண்டு பயனீட்டாளர் பாதுகாப்புச் சட்டம் செக்‌ஷன் 43-இன் படி தரமற்ற பொருள்களை மீண்டும் நீங்கள் விற்பனையாளரிடமே அனுப்பி வைத்து நீங்கள் செலுத்தியப் பணத்தை கோரலாம். அல்லது தரமான பொருளுடன் மாற்றும்படி கேட்கலாம். அல்லது அந்த விலைக்கு ஏற்றவாறான வேரொரு பொருளையும் கேட்கலாம்,'' என்றார் அவர்.

நடப்பு சூழலில் திறன்பேசி, இணையம் ஆகியவற்றின் உதவியால் வாங்கும், விற்கும் பணி உட்பட அனைத்துப் பணிகளையும் எளிமையாகச் செய்துவிட முடியும் என்றாலும்கூட ஏமாற்றும், ஏமாறும் படலமும் அதுனூடே உருவாகின்றன.

எனவே, இது போன்றவற்றில் எளிதில் சிக்கிக்கொண்டு பின்னர் அலைச்சல் ஏற்படுவதைத் தவிர்க்க மக்கள் விவேகத்துடன் செயல்பட வேண்டும் என்று  கார்த்திகேசன் வலியுறுத்தினார். 

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]