உலகம்

தன்சானியாவில் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் இதுவரை 155 பேர் பலி

26/04/2024 04:40 PM

தன்சானியா, 26 ஏப்ரல் (பெர்னாமா) -- கடந்த சில வாரங்களாக தன்சானியாவில் பெய்து வரும் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் இதுவரை 155 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் காசிம் மஜாலிவா தெரிவித்துள்ளார்.

கனமழை மோசமாகி வருவதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பதிவாகியதைக் காட்டிலும் இரட்டிப்பாகி உள்ளது.

குறிப்பாக, கடலோரப் பகுதிகளிளும், டார் எஸ் சலாம் நகரிலும் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது.

தற்போது நீடித்து வரும் மோசமான மழைப் பொழிவினால் வெள்ளம் ஏற்பட்டுள்ளதோடு சாலைகள், பாலங்கள் மற்றும் ரயில் பாதைகள் சேதமடைந்துள்ளதாக காசிம் மஜாலிவா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

வெள்ளத்தினால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

வெள்ளத்தில் சிக்கிக் கொண்டவர்களை அவசர சேவைப் பிரிவினர் காப்பாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் உயரமான பகுதிகளுக்குச் செல்லுமாறு மஜாலிவா வலியுறுத்தி உள்ளார்.

புருண்டி மற்றும் கென்யா உட்பட கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் பெய்து வரும் கனமழையினால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

கென்யாவில் மட்டும் கடந்த திங்கட்கிழமை வரை 35 பேர் உயிரிழந்துள்ளனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)