உலகம்

கிழக்கு ஆப்பிரிக்க வெள்ளம்; 7 லட்சம் பேர் பாதிப்பு

07/05/2024 08:19 PM

ஆப்பிரிக்கா, 07 மே (பெர்னாமா) -- கிழக்கு ஆப்பிரிக்காவில் பெய்து வரும் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சுமார் ஏழு லட்சத்து 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளுக்கான மனிதநேய அமைப்பு தெரிவித்துள்ளது.

இப்பேரிடரில் இரண்டு லட்சத்து 34 ஆயிரம் பேர் தங்களின் வீடுகளை இழந்ததோடு 236-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

அவர்களில் கென்யாவில் மட்டும் 229-க்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர்.

கென்யாவில் நீடித்து வரும் கனமழையினால் இரண்டு லட்சத்து 85 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக மனிதநேய விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு, OCHA-விற்கான ஐ.நா அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

சொமாலியாவில் வெள்ளத்தினால் ஒரு லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள வேளையில், 37 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

புருண்டியில், கனமழை மற்றும் தங்கனிகா ஏரியில் நீர்மட்டம் அதிகரிப்பினால், கடந்த ஜனவரி முதல் சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் புருண்டியின் விவசாயத்தில் 40 ஆயிரம் ஹெக்டர் பகுதி அல்லது 10 விழுக்காடு சேதமடைந்துள்ளதாக அந்நாட்டின் அமலாக்கத் தரப்பு தெரிவித்துள்ளது.

தன்சானியாவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ உணவு, மெத்தை, கொசுவலை, கூடாரம் உட்பட அவசர உதவிகள் வழங்குவதற்கு தேடல் மற்றும் மீட்புக் குழுவை அந்நாட்டு அரசாங்கம் அனுப்பியுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)