விளையாட்டு

யூரோ 2024 காற்பந்து போட்டி; ஆட்ட முடிவுகள்

17/06/2024 07:46 PM

ஜெர்மனி, 17 ஜூன் (பெர்னாமா) -- யூரோ 2024 காற்பந்து போட்டி...

திங்கட்கிழமை அதிகாலையில் நடைபெற்ற C பிரிவு ஆட்டத்தில், இங்கிலாந்து 1-0 என்ற கோல் கணக்கில் செர்பியாவை வீழ்த்தியது.

13வது நிமிடத்தில் இங்கிலாந்து ஆட்டக்காரர் ஜூட் பெல்லிங்ஹம் அடித்த முதல் கோல் மூலம் இங்கிலாந்து அணி முன்னிலை வகித்தது.

இங்கிலாந்து அணி நிர்வாகி கரேத் சவுத்கேட் தலைமையிலான அவ்வணி ஆட்டத்தை ஆக்கிரமித்தாலும், அதிகமான கோல்களைப் போட முடியாமல் ஒரு கோலுடன் ஆட்டம் நிறைவடைந்தது.

இதனிடையே, மற்றொரு C பிரிவு ஆட்டத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் டென்மார்க்கும் ஸ்லோவேனியாவும் சமநிலை கண்டன.

ஆட்டம் தொடங்கி 17ஆவது நிமிடத்தில் டென்மார்கின் கிறிஸ்டியன் எரிக்சன் முதல் கோல் அடித்த நிலையில், அவ்வணி முன்னிலை வகித்தது.

டென்மார்கின் ஆதரவாளர்கள் நிரம்பியிருந்த ஸ்டட்கார்ட் அரங்கில், ஸ்லோவேனியாவின் எரிக் ஜான்சா 77ஆவது நிமிடத்தில் ஒரு கோலை அடித்து, 2000ஆம் ஆண்டு யூரோ காற்பந்து ஆட்டத்திற்குப் பிறகு அவ்வணி முதல் ஆட்டத்தில் முதலாவது புள்ளியைப் பெற்றது.

மற்றொரு நிலவரத்தில், D பிரிவுக்கான ஆட்டத்தில் நெதர்லாந்து 2-1 என்ற கோல் கணக்கில் போலந்தை வீழ்த்தியது.

முதல் பாதி ஆட்டத்தின் 16ஆவது நிமிடத்தில் போலாந்து அணியின் ஆடம் புக்ஸா முதல் கோலை அடித்து தமது அணியை முன்னணிலைப்படுத்தினார்.

அதன் பின்னர், நெதர்லாந்தின் ஆட்டக்காரர் கோடி காக்போ 29ஆவது நிமிடத்தில் தமது அணிக்கான முதல் கோலையும், வூட் வெகோர்ஸ்ட் 83ஆவது நிமிடத்தில் இரண்டாம் கோலையும் புகுத்தி தங்களின் அணியை வெற்றிப் பெறச் செய்தனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)