சிறப்புச் செய்தி

பதின்ம வயது பெண்களையும் சீரழிக்கும் போதைப் பொருள்

26/06/2024 08:22 PM

ஷா ஆலாம், 26 ஜூன் (பெர்னாமா) --  அறிவியல் மற்றும் தொழிநுட்ப முன்னேற்றத்திலும் கல்வியாற்றலிலும் வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கு நிகராக மலேசியா முன்னேறி வருவது பெருமைக்குரியது என்றாலும் மேலை நாடுகளுக்கு நிகராக இன்னும் இங்கு குறிப்பிட்ட தரப்பினர் குறிப்பாக இளைஞர்களும், பதின்ம வயது பெண்களும் போதைப் பொருளுக்கு அடிமையாகி தங்களின் எதிர்காலத்தை பாழ்ப்படுத்தி வருகின்றனர்.

இப்பழக்கத்தினால் அப்பாவி பெண்கள் மற்றும் சிறார்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளும் குடும்ப வன்முறைகளும் பொது வெளியில் நிகழும்  ஒழுக்கக்கேடுகளும் அதிகரித்து வருவதைக் கண்டித்து அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

எனினும், இன்னும் இதில் சிக்கி சீரழிவோரின் எண்ணிக்கை அதிகமாகவே காணப்படுவதாக சிலாங்கூர் வழக்கறிஞர் மன்றத் தலைவர் கோகிலவாணி வடிவேலு வருத்தம் தெரிவித்தார்.

2023-ஆம் ஆண்டு கட்டாய மரணத் தண்டனை அகற்றப்படுவது தொடர்பான சட்டமசோதா மேலவையில் அங்கீகரிப்பட்டதைத் தொடர்ந்து, போதைப் பொருள் தொடர்புடைய குற்றங்களையும் உட்படுத்தி கட்டாய மரண தண்டனை அகற்றப்பட்டிருந்தாலும், நாட்டில் இன்னமும் போதைப் பொருள் குறித்த குற்றங்களை நீதித்துறை கடுமையாக கருதுவதுடன் அதற்கான தண்டனையிலும் தளர்வுகள் அதிகளவில் வழங்கப்படவில்லை என்று கோகிலவாணி விவரித்தார்.

''போதைப் பொருள் பயன்படுத்துவது மட்டுமின்றி, அதை வைத்திருப்பது விநியோகிப்பது ஆகிய அனைத்துமே கடுமையான குற்றங்களாக கருதப்படுகின்றன. இன்றைய சூழ்நிலையில் இப்பழக்கத்திலிருந்து வெளிவர அரசாங்கம் பல முயற்சிகளை முன்னெடுக்கிறது. அதைப் பின்பற்றி போதைப் பொருள் பழக்கத்திலிருந்து இளைஞர்களும் பதின்ம வயது பெண்களும் தங்களை விடுவித்துக் கொள்ள வேண்டும்,'' என்று அவர் ஆலோசனைக் கூறினார்.

அதுமட்டுமின்றி நமக்கு அதிகம் பழக்கம் இல்லாதவர்களுக்கு வாகனத்தை இரவல் வழங்க வேண்டாம் என்றும் கோகிலவாணி கேட்டுக் கொண்டார்.

''நண்பர்களையோ அல்லது தெரியாதவர்களையோ நம்பி வாகனத்தை வழங்கினால் உங்களை அறியாமல் அவர்கள் வாகனத்தில் போதைப் பொருளை பதுக்கி வைத்திருந்தாலும், பின்னாளில் அக்குறத்தில் உங்களுக்கும் துணையுண்டு என்று அர்த்தமாகிவிடும்,'' என்று அவர் அறிவுறுத்தினார்.

இதனிடையே, மருத்துவம் மற்றும் ஆராய்ச்சிக்காகப் பயன்படுத்தும் சில போதைப் பொருட்களின் நிலைக் குறித்தும் அவர் விவரித்தார்.

''கெனபிஸ், கஞ்சா வகைப் போதைப் பொருட்கள் சில ஆய்வுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. அவற்றுள் அனைத்திற்குமே அனுமதியை அரசாங்கம் வழங்வில்லை. மாறாக அதற்கான பயன்பாடு குறித்து இன்னும் பேச்சுவார்த்தை அளவிலே உள்ளது,'' என்றார் அவர்.

நாட்டில் சில குறிப்பிட்ட பகுதிகளில் இன்னும் போதைப் பொருள் ஊடுருவல் அதிகரித்து வருவதால் அப்பகுதிகளை முற்றாக துடைத்தொழிக்க காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோகிலவாணி கேட்டுக் கொண்டார்.

இன்று உலக போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பெர்னாமா தமிழ்செய்திகளிடம் பேசிய அவர் அவ்வாறு தெரிவித்தார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]