BRIEF-I: இதுவரை 38 லட்சம் ரிங்கிட் நிதி விநியோகிக்கப்பட்டது

28/06/2024 09:06 PM

கோலாலம்பூர், 28 ஜூன் (பெர்னாமா) -- BRIEF-i எனப்படும் பேங்க் ரக்யாட் இந்திய தொழில்முனைவோர் நிதியளிப்பு திட்டத்தின் மூலமாக, குறு, சிறு, நடுத்தர வியாபாரம் செய்யும் இந்திய தொழில்முனைவோருக்கு பிரேத்தியேகமாக வழங்கப்பட்டுள்ள ஐந்து கோடி ரிங்கிட் நிதி ஒதுக்கீடானது, ஆகஸ்ட் தொடங்கி செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் முழுமையாகப் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதுவரை, 38 லட்சம் ரிங்கிட்டை உள்ளடக்கி 43 விண்ணப்பங்களுக்கு பேங்க் ரக்யாட் வங்கி ஒப்புதல் அளித்துள்ளதாக தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

''இன்று மட்டும் 17 பேருக்கு கொடுத்துள்ளோம். 1,000-க்கும் மேலான விண்ணப்பங்களைப் பெற்றுள்ளோம். ஒன்றன் பின் ஒன்றாக அவற்றை சரிபார்த்து வருகிறோம்,'' என்றார் அவர். 

இன்று, கோலாலம்பூரில் உள்ள பேங்க் ரக்யாட்டில் மாதிரி காசோலையை வழங்கியப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். 

உணவு மற்றும் பானத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் ஹலால் சான்றிதழ் இல்லாத இந்திய தொழில்முனைவோர் விவகாரம் குறித்து தெக்குன் கடனுதவி வழங்கும் தரப்பிடம் கொண்டு செல்லப்படும் என்று ரமணன் கூறினார்.

''ஹலால் சான்றிதழ் இருந்தால்தான் நீங்கள் இந்நிதியை விண்ணப்பிக்க முடியும் என்று நான் கூறவில்லை. மாறாக, ஹலால் சான்றிதழை விண்ணப்பிக்கும் பட்சத்தில் உங்கள் வியாபாரத்தை அடுத்தக் கட்டத்திற்கு இட்டுச் செல்ல முடியும் என்றே நான் கூறினேன். அதனை, சில பொறுப்பற்ற தரப்பினர் திசை திருப்புகின்றனர்,'' என்று அவர் குறைப்பட்டுக் கொண்டார். 

இதனிடையே, BRIEF-i திட்டத்தின் மூலம் நிதியுதவியைப் பெற்றுக்கொண்ட சில வர்த்தகர்களும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்தனர். 

''ஹலால் சான்றிதழை வைத்திருந்தாள் வாய்ப்புகள் அதிகமாகும். அதிகமான அரசாங்க குத்தகைகள் கிடைக்கும்,'' என்று கிளந்தானில் உள்ள வர்த்தகரான ஜெயந்திரன் ஜெயராமன் குறிப்பிட்டார். 

''நீங்கள் முறையாக உங்கள் தொழிலை செய்தீர்களேயானால் நிச்சயம் உங்களுக்கு கடனுதவி கிடைக்கும். உங்களுடைய வங்கிக் கணக்குகள், வருமான வரி, கடனை திரும்பச் செலுத்தும் முறை போன்ற அம்சங்கள் அனைத்தும் சரியாக இருந்தால் கண்டிப்பாக கடனுதவி கிடைக்கும்,'' என்று வர்த்தகர் வள்ளியம்மா குமரசாமி கூறினார். 

குறு, சிறு, நடுத்தர வியாபாரம் செய்யும் இந்திய தொழில்முனைவோர் தங்களின் வியாபாரத்தை மேம்படுத்தும் வகையில் கடந்த ஜூன் ஐந்தாம் தேதி BRIEF-i திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.  

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]