பொது

7 மாதங்களில் இணையத்தில் அரிசி விற்பனை தொடர்பான 94 விளம்பரங்கள் அகற்றம்

03/07/2024 06:05 PM

கோலாலம்பூர், 02 ஜூலை (பெர்னாமா) -- கடந்தாண்டு அக்டோபர் முதலாம் தேதி தொடங்கி இவ்வாண்டு மே 31-ஆம் தேதி வரையில், இணையத்தில் அரிசி விற்பனை தொடர்பான 94 விளம்பரங்கள் மின்னியல் வர்த்தக தள வழங்குநர்களால் அகற்றப்பட்டுள்ளன.

ஏனெனில் நெல் மற்றும் KPB அரசி கட்டுப்பாட்டு பிரிவால் வெளியிடப்பட்ட சில்லறை வணிக உரிமத்தை அவர்கள் கொண்டிருக்கவில்லை.

அதோடு, விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சு மேற்கொண்ட ஆய்வுகளில், விற்கப்படும் அரிசியும் சட்டவிரோத மூலங்களிலிருந்து பெறப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுவதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அந்த அறிக்கையின் படி, கட்டுப்படுத்தப்பட்ட அரிசியை, மின்னியல் விற்பனைத் தளத்தைப் பயன்படுத்தி விற்பனை செய்வது, 1994-ஆம் ஆண்டு நெல் மற்றும் அரசி கட்டுப்பாட்டுச் சட்டம் மற்றும் அதன் கீழுள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டது என்றும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு 25 ஆயிரம் ரிங்கிட் வரை அபராதம் அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு மேற்போகாத சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

சட்டம் 522 மற்றும் அதன் விதிமுறைகளுக்கு கீழ், நெல் மற்றும் அரிசி ஆகியவை கட்டுப்படுத்தப்பட்ட பொருட்கள் ஆகும்.

கட்டுப்படுத்தப்பட்ட நெல் மற்றும் அரிசி சம்பந்தப்பட்ட இணைய விற்பனை உட்பட தொழிற்சாலை, மொத்த விற்பனை, சில்லறை விற்பனைக்கு KPB தலைமை இயக்குநரால் வெளியிடப்படும் உரிமம் மிகவும் அவசியம் என்று கூறப்படுகிறது.

அவ்வாறு உரிமம் பெறாமல் விற்பனை செய்வது 1996-ஆம் ஆண்டு கட்டுப்படுத்தப்பட்ட நெல் மற்றும் அரிசி சட்டவிதிமுறையின் கீழ் குற்றமாக வகைப்படுத்தப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ) 502