கட்டிட கலையில் மலேசியர்களின் கலாச்சார அம்சங்கள் இடம்பெற வேண்டும்

03/07/2024 07:21 PM

கோலாலம்பூர், 03 ஜூலை (பெர்னாமா) -- மேம்பாட்டாளர்கள், கட்டிடக் கலைஞர்கள், திட்டமிடுபவர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள், மேம்பாட்டு திட்டங்களில் கலாச்சார அம்சங்களை உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

எந்தவொரு வளர்ச்சியை திட்டமிடும்போது நாட்டின் பல்வேறு மற்றும் வளமான கலாச்சார பாரம்பரியத்தை கருத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

''நமது சமூகத்தின் ஒரு பகுதியாக இருக்கும் பூர்வீக மலாய், சீன மற்றும் இந்தியக் கலாச்சாரத்தின் பின்னணியில், கலாச்சார ரீதியாகத் துடிப்பான தன்மையை (கட்டிடக் கலை) கொண்டிருக்க வேண்டும். மேலும் நீங்கள் சபா மற்றும் சரவாக்கை அணுகினால் ஒரு அற்புதமான கலாச்சார கலவையைக் காண்பீர்கள்,'' என்றார் அவர்.

புதன்கிழமை நடைபெற்ற 23வது அனைத்துலக கட்டிடக்கலை, வடிவமைப்பு மற்றும் கட்டிட கண்காட்சியில் உரையாற்றும் போது, பிரதமர் அவ்வாறு கூறினார்.

பழங்குடியின மக்கள், மலாய்க்காரர்கள், சீனர்கள் மற்றும் இந்தியர்களை உட்படுத்தி பல கலாச்சார அம்சங்கள் இருப்பதால், அவை திட்டமிடல் அல்லது கட்டிட கலையில் இணைக்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ) 502