பொது

சூதாட்ட நடவடிக்கை; 9 வெளிநாட்டவர் உட்பட 24 பேர் கைது

05/07/2024 07:26 PM

கோலாலம்பூர், 5 ஜூலை (பெர்னாமா) -- கோலாலம்பூர், ஜாலான் துன் ரசாக்கில் உள்ள இரு அடுக்குமாடி குடியிருப்புகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில், 9 வெளிநாட்டவர் உட்பட 24 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும், இக்கைது நடவடிக்கையின் மூலமாக, மென்பொருள் நிர்வகிப்புத் துறையில் திறன்மிக்கவர்களை நியமிக்கும் சூதாட்ட கும்பலின் தந்திரமும், போலீசாரால் முறியடிக்கப்பட்டது.

24 முதல் 44 வயதுக்கு உட்பட்ட 14 ஆண்களும் 10 பெண்களும் கடந்த ஜூன் 27-ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டதாக வங்சா மாஜு மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முஹமட் லாசிம் இஸ்மாயில் தெரிவித்தார்.

மேலும் அவர்களிடமிருந்து அனுமதி அட்டை, மடிக்கணினி, திறன்பேசி, I PAD உள்ளிட்ட தொலைத் தொடர்பு சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட அக்கும்பல், உள்நாடு மட்டுமின்றி சீன நாட்டு பிரஜைகளுக்கு, சுமார் 5,000 முதல் 12,000 ரிங்கிட் வரை, சம்பள சலுகைகளுடன் மென்பொருள் நிர்வகிப்பில் தனிநபர்களை சேர்ப்பது முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டதாக முஹமட் லாசிம் கூறினார்.

இன்று வங்சா மாஜு மாவட்ட போலீஸ் தலைமையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் அவ்வாறு தெரிவித்தார்.

இரு வெவ்வேறு மோசடிக் கும்பலில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் வழி, அவ்விரு கும்பல்களும் கடந்த ஆறு மாத காலமாக இந்நடவடிக்கையில் ஈடுபட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது.

1953-ஆம் ஆண்டு திறந்தவெளி சூதாட்ட சட்டம் செக்‌ஷன் 4(1)-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகின்றது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)