பொது

ஈஷா மரணம்; விசாரணைக்காக பெண் கைது

08/07/2024 05:58 PM

கோலாலம்பூர், 08 ஜூலை (பெர்னாமா) -- டிக் டோக்கில் இணைய பகடிவதைக்கு ஆளாகி ராஜேஸ்வரி அல்லது ஈஷா என்பவர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் தொடர்பில், விசாரணைக்கு உதவ இன்று காலை ரவாங் கோல்ஃப் கிளப்பில் பெண் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

ராஜேஸ்வரியை மிரட்டியதன் காரணமாக 35 வயதுடைய அப்பெண்ணை போலீசார் கைது செய்துள்ளதாக செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அஹ்மட் சுகார்னோ முஹமட் சஹாரி தெரிவித்தார்.

கடந்த ஜூன் 30 முதல் ஜூலை ஒன்றாம் தேதிக்கு இடையில் நிகழ்ந்ததாக நம்பப்படும் அச்சம்பவம் குறித்து, சனிக்கிழமை ஆடவர் ஒருவரிடமிருந்து தமது தரப்பிற்கு புகார் கிடைத்ததாக அவர் கூறினார்.

ராஜேஸ்வரியை அவதூறாகப் பேசியதுடன், அவரை மிரட்டியதற்கான இரண்டு டிக் டோக் பதிவுகளை தாம் கண்டறிந்தது தொடர்பில் அவ்வாடவர் போலீஸ் புகார் செய்துள்ளார்.

சம்பந்தப்பட்ட இரண்டு டிக் டோக் கணக்குகளிலும், ராஜேஸ்வரியின் புகைப்படங்கள் காணொளியின் உள்ளடக்கத்தின் பின்னணியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், அதில் அச்சுறுத்தல்களும் தவறான மற்றும் ஆபாசமான வார்த்தைகளும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சம்பந்தப்பட்ட அந்த உள்ளடக்கம் நீக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது.

ஆதரவற்ற இல்லம் ஒன்றில் உதவியாளராகப் பணி புரிந்து வரும் அப்பெண், விசாரணைக்காக வரும் புதன்கிழமை வரையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மற்றொருவரும் தேடப்பட்டு வருகிறார். 

சிறு குற்றங்களுக்கான சட்டம் செக்‌ஷன் 14, 1998ஆம் ஆண்டு தொடர்பு பல்லூடக சட்டம் செக்‌ஷன் 233 மற்றும் குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 506-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)