பொது

நுழைவாயில் மூடப்பட்டாலும் பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் போலீஸ் புகார் செய்யலாம்

10/07/2024 02:54 PM

கோலாலம்பூர், 10 ஜூலை (பெர்னாமா) -- கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பைப் பலப்படுத்தும் நடவடிக்கையாக போலீஸ் நிலையத்தின் நுழைவாயில் இரவு மணி பத்துக்கு மூடப்பட்டாலும், அதற்குப் பின்னரும் பொதுமக்கள் வந்து புகார் செய்யலாம்.

அச்சுறுத்தல்களுக்கு ஆளாகும் போலீஸ் நிலையங்களுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் முன்னெச்சரிக்கைகளை கொள்கையளவில் கவனித்து, நேற்று மக்களவையில் உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைப்புஃடின் நசுத்தியோன் இஸ்மாயில் பதில் அளித்ததாக அவ்வமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

பொது பாதுகாப்பு மற்றும் அமைதியை உறுதிசெய்யும் கடப்பாட்டைக் போலீஸ் தரப்பு கொண்டுள்ள வேளையில். அவரின் பதிலை சில தரப்பினர் மறு விளக்கம் அளித்து போலீஸ் நிலையத்தின் நுழைவாயில் முற்றிலும் மூடுப்படுவதாக கூறியிருப்பது நிச்சயம் நியாயமற்றது என்று உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்று மக்களவையில், அமைச்சர்களின் கேள்வி பதில் நேரத்தின் போது, செரியான்  நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ ரிச்சர்ட் ரியோட் எழுப்பிய கேள்விக்கு சைப்புஃடின் நசுத்தியோன் பதிலளிக்கையில்,  அண்மையில் ஜோகூர் உலுதிராம் போலீஸ் நிலையத்தில் நடந்த தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கையாக இரவு 10 மணிக்குப் பிறகு  போலீஸ் நிலைய வாயில்கள் மூடப்படுவதாகக் கூறியிருந்தார்.

போலீஸ் நிலையத்திற்கு செல்வதற்கான மக்களின் தேவைகளை ஈடுசெய்யும் அதேவேளையில், கடமையில் உள்ள போலீஸ் உறுப்பினர்களின் பாதுகாப்பைப் பேணவும் இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டது.

இவ்விவகாரம் குறித்து நேற்று தேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஶ்ரீ ரசாருடின் ஹுசேனைத் தொடர்பு கொண்டபோது, போலீசாரின் சேவை வழக்கம் போல தொடர்ந்து வருவதாகவும் நுழைவாயில் மூடப்பட்டிருந்தாலும  பொதுமக்கள் தாராளமாக சென்று புகார் செய்யலாம் எனவும் தெரிவித்தார். 

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)