சிறப்புச் செய்தி

இந்தியர் மறுமலர்ச்சித் திட்டம் - பிரதமரின் தூரநோக்கு சிந்தனை

11/07/2024 06:57 PM

கோலாலம்பூர், 11 ஜூலை (பெர்னாமா) -- ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின் கீழ் கல்வி, பொருளாதார உருமாற்றம், வணிகம், சமூக நலன் ஆகியவற்றில் நாட்டிலுள்ள இந்திய சமூகத்தினர் பலன் அடைந்து வருகின்றனர்.

பிரதமரின் அனைத்து தூரநோக்குத் திட்டங்களும், தற்போதுள்ள தலைமுறையோடு சேர்த்து வருங்கால தலைமுறைக்கும் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்பதால், அவ்வனைத்து அனுகூலங்களையும் இந்திய சமூகத்தினர் முழுமையாகப் பெற்று பயனடைய வேண்டும் என்று அரசியல் ஆய்வாளர் டத்தோ டாக்டர் ஏ.டி.  குமரராஜா கேட்டுக் கொண்டார். 

"இதைத் தவிர்த்து கல்வித் திட்டங்களை ஒப்பிடுகையில் கடந்த காலத்தில் இருந்த பாலர் பள்ளி தொடங்கி ஆரம்பப்பள்ளி, இடைல்நிலைப்பள்ளி, உயர்க்கல்விக்கூடம் என்று அனைத்து நிலையிலும் இன அடிப்படையிலன்றி தேவையின் அடிப்படையில் பூர்த்தி செய்வதற்கு சில தினங்களுக்கு முன்னதாக அரசாங்கமே அறிவித்திருந்தது," என்று அவர் கூறினார்.

குறிப்பாக 10ஏ பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் சமசரியாக இந்த வாய்ப்புகள் வழங்கப்படும் என்று பிரதமரே நேரடியாக அறிவித்திருப்பது, அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை மேலெழச் செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

அதுமட்டுமின்றி எக்காலகட்டத்திலும் கல்வி, பொருளாதார உருமாற்றம் மற்றும் சமூகநலன் சார்ந்த உதவிகள் இந்திய சமூகத்திற்கு அதிகளவில் தேவைப்படும் என்பதை நன்குணர்ந்து பிரதமர், வர்த்தகம் சார்ந்த கூடுதல் நிதி ஒதுக்கீடுகளையும் செய்துள்ளதை குமாரராஜா கோடிகாட்டினார்.

"2008-இல் இருந்து 2012ஆம் ஆண்டு வரை உருமாற்றம் கண்ட இந்த ஸ்பூமி திட்டத்தின் கீழ் கடந்த காலத்தைக் காட்டிலும் அதிகமான நிதி ஒதுக்கீட்டை அரசாங்கம் செய்துள்ளது. அதைத் தவிர்த்து ஏற்கெனவே இருந்த 'பெண்' திட்டத்தை உருவகப்படுத்தி புத்தாக்க சிந்தனையில் அதற்கு கூடுதலாக நிதி ஒதுக்கி இருப்பதும் இந்தியப் பெண்களின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளது," என்று அவர் குறிப்பிட்டார்.

இதைத் தவிர்த்து இன்னும் பல திட்டங்கள் அமல்படுத்தப்பட்டிருக்கும் வேளையில், மேலும் சில திட்டங்களும் அறிமுகம் காண்பதற்கு தயார் நிலையில் உள்ளன.

இதன் மூலம் கடந்த நான்கே மாதங்களில் அரசாங்கம் 13 கோடி ரிங்கிட்டினை இவ்வனைத்து திட்டங்களுக்கும் செலவிட்டுள்ளது, இந்திய சமூகத்தின் மீது கொண்டுள்ள பற்றுதலை நிரூபிப்பதாகவும் அவர் கூறினார்.

"இத்தகைய திட்டங்களை அமல்படுத்தும் போது சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். அத்தடைகளைக் கடந்து வரக்கூடிய நிபுணத்துவமும் ஆற்றலும் நம் சமுதாயத்திடம் உள்ளதை நம் சமுதாயத் தலைவர்களும் சமுதாயத்தை சார்ந்த பொது இயக்கங்களும், இளைஞர்கள் நன்குணர வேண்டும். அவ்வாறு உணர்ந்தால் மட்டுமே அடுத்தகட்டத்திற்கு நம்மால் செல்ல முடியும்," என்றார் அவர். 

மேலும், இன்றைய காலகட்டத்தில் இன அடிப்படையில் தேவைகளைப் பூர்த்தி செய்வதைக் காட்டிலும், தேவைகளின் அடிப்படையில் சில விஷயங்களை முன்னெடுத்தால் மட்டுமே சிறுபான்மையில் உள்ள இந்திய சமூகம், பலம் பெற்ற சமுதாயமாக திகழ முடியும் என்று ஏ.டி. குமரராஜா தமது எதிர்ப்பார்ப்பினை வெளிப்படுத்தினார்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)