பொது

எல்லை தொடர்பில் மலேசியாவும் புருணையும் விவாதம்

16/07/2024 04:25 PM

கோலாலம்பூர், 16 ஜூலை (பெர்னாமா) -- சுமார் 528.45 கிலோமீட்டர் தூரத்தை உள்ளடக்கிய இரு நாடுகளுக்கும் இடையிலான நில எல்லை தொடர்பான உடன்படிக்கை அல்லது புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு மலேசியாவும் புருணையும் விவாதித்து வருகின்றன.

தளத்தில் மேற்கொள்ளப்படும் குறியிடல் மற்றும் அளவீடு பணிகள், இதுவரை 175.96 கீலோமீட்டர் அல்லது 33.3 விழுக்காடு நிறைவடைந்துள்ளதாக வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான் கூறினார்.

"2034-ஆம் ஆண்டு வரையில் ஒப்புக் கொள்ளப்பட்ட காலக்கெடுவின் அடிப்படையில் எல்லை நிர்ணய சிக்கலைத் தீர்க்க இரு தரப்பினரும் முயற்சிக்கின்றனர். நிலம் மற்றும் கடல் எல்லைகளை இறுதி செய்ய தற்போதுள்ள இருதரப்பு வழிமுறைகளின் மூலம் இந்தோனேசியா மற்றும் புருணை ஆகிய இரு நாடுகளுடன் மலேசியா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும்", என்றார் அவர்.

இன்று, மக்களவையில் லாவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஹென்றி சன் அகோங்  எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

அண்டை நாடுகளுடனான எல்லைகள் தொடர்பில், இதுவரை 33 நில எல்லை ஒப்பந்தங்களிலும் ஒன்பது கடல்சார் ஒப்பந்தங்களிலும் மலேசியா கையெழுத்திட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)