பொது

காணாமல் போயிருந்த நூர் ஃபாரா கொலை; சந்தேக நபராக போலீஸ் உறுப்பினர் கைது

16/07/2024 04:45 PM

ஈப்போ, 16 ஜூலை (பெர்னாமா) -- நேற்று மாலை, உலு சிலாங்கூர், கம்போங் ஶ்ரீ கிளெடாங்கில்  இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட நூர் ஃபாரா கார்தினி அப்துல்லா எனும் பெண்மணி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஆடவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக போலீஸ் உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார்.

அந்த 26 வயதுடைய சந்தேக நபர் சிலிம் ரிவர் போலீஸ் நிலையத்தில் லான்ஸ் கோப்ரலாக  பணிபுரிந்து வருவதைப் பேராக் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அசிசி மாட் அரிஸ் உறுதிபடுத்தினார்.

ஜூலை 11-ஆம் தேதி, காணவில்லை எனும் அடிப்படையிலான புகாரை முவாலிம் மாவட்ட போலீஸ் தலைமையகம் பெற்ற நிலையில் காணாமல் போனவரைத் தேடும் பணியிலும் விசாரணையிலும் போலீஸ் ஈடுபட்டது.

இந்நிலையில், சிலாங்கூரின் எந்தப் பகுதியில் அச்சம்பவம் நிகழ்ந்தது என்ற தகவலை அச்சந்தேக நபர் அளித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 302-இன் கீழ் சிலாங்கூர் போலீஸ் தலைமையகம் விசாரணை அறிக்கையைத் திறந்ததாக டத்தோ அசிசி தெரிவித்தார்.

ஜூலை பத்தாம் தேதியிலிருந்து காணாமல் போயிருந்த 25 வயதான நூர் ஃபாரா கார்தினி, நேற்று மாலை மணி ஆறு அளவில் உலு சிலாங்கூர், கம்போங் ஶ்ரீ கிளெடாங்கில் உள்ள செம்பனை தோட்டம் ஒன்றில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ உசேன் ஒமார் கான் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)