பொது

இணையப் பகடிவதை குற்றத்திற்கான சட்டம் ஆய்வு - ஃபஹ்மி

16/07/2024 04:37 PM

புத்ராஜெயா, 16 ஜூலை (பெர்னாமா) -- தொடர்பு அமைச்சு இதர அமைச்சுகளின் ஒத்துழைப்புடன் இணையப் பகடிவதை குற்றத்திற்கான நடப்பில் உள்ள சட்ட அம்சத்தை மேம்படுத்துவது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் கூறினார்.

அது குறித்து, இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, சட்டம் மற்றும் கழகச் சீர்திருத்தத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அசாலினா ஒத்மான் சைட் உட்பட சில அமைச்சர்கள் தெரிவித்திருப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

''இணையப் பகடிவதை என்ற விளக்கம் அடிப்படையில் மட்டுமல்லாது விதிக்கப்படும் அபராதம் அல்லது தண்டனையிலும் உண்மையிலேயே என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ள எனக்கு சற்று கால அவகாசம் தேவை. ஆனால், கொள்கை அடிப்படையில் அமைச்சரவை அளவிலும் 3-4 அமைச்சர்கள் அமர்ந்து மேம்படுத்தப்பட வேண்டிய சட்ட அம்சங்களை ஆராய்கின்றனர்'', என்றார் அவர்.

சில குற்றவியல் சட்டங்களில் உடனடியாக திருத்தம் மேற்கொள்ளலாம் என்று டத்தோ ஶ்ரீ அசாலினா முன்னதாக தெரிவித்திருந்ததை ஃபஹ்மி எடுத்துரைத்தார்.

இணைய பகடிவதைக்கு ஆளானதாக புகார் அளித்த மறுநாள், அ. ராஜேஸ்வரி அல்லது ஈஷா என்பவரின் சடலம் செத்தாபாகில் உள்ள ஆடம்பர அடுக்குமாடி வீடொன்றில் கண்டெடுக்கப்பட்டதாக முன்னதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)