பொது

அக்டோபர் 18-இல் 2025 வரவு செலவுத் திட்டம் தாக்கல்

12/07/2024 07:41 PM

புத்ராஜெயா, 12 ஜூலை (பெர்னாமா) -- ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின் மூன்றாவது வரவு செலவுத் திட்டமான 2025-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் வரும் அக்டோபர் 18-ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்படும். 

தங்களின் அமைச்சு உட்பட சம்பந்தப்பட்ட துறையில் உள்ள அனைத்து பங்குதாரர்களுடன், 2025 மடானி வரவு செலவுத் திட்டம் குறித்த கலந்துரையாடல் அமர்வை மேற்கொள்ளும்படி, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அனைத்து அமைச்சர்களுக்கும் உத்தரவிட்டுள்ளதாக, தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார். 

இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்குப் பின்னர், ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின் பேச்சாளருமான அவர் செய்தியாளர்களிடம் பேசினார். 

தென்கிழக்கு ஆசியாவில் மலேசியாவை ஒரு பொருளாதார சக்தியாக மாற்றுவது உட்பட மடானி பொருளாதார கட்டமைப்பிற்குள் இலக்காகக் கொண்ட தரப்படுத்துதல் அம்சங்களில் 2025-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் கவனம் செலுத்தும் என்று பிரதமர் கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தார். 

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)