பொது

டீசல் உதவித் தொகை மறுசீரமைப்பு திட்டம்; 25 கோடி ரிங்கிட்டிற்கும் அதிகமான டீசல் கசிவைத் தவிர்க்கலாம்

14/07/2024 06:09 PM

தும்பாட், 14 ஜூலை (பெர்னாமா) -- ஜூன் 10-ஆம் தேதி தொடங்கி டீசல் உதவித் தொகை மறுசீரமைப்பு திட்டம் அமலாக்கம் கண்டதை தொடர்ந்து, தீபகற்பத்தின் எல்லையில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் மேற்கொள்ளப்படும் கடத்தல் நடவடிக்கையினால் ஏற்படும் 25 கோடி ரிங்கிட்டிற்கும் அதிகமான டீசல் கசிவைத் தவிர்க்கலாம் என்று அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது.

மேலும், ஜூன் 10-ஆம் தேதி முதல் டீசல் விற்பனை நாள் ஒன்றுக்கு 23 விழுக்காடு அல்லது 65 லட்சம் லிட்டர் குறைந்துள்ளதாக இரண்டாவது நிதி அமைச்சர் டத்தோ ஶ்ரீ அமிர் ஹம்சா அசிசான் தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை, கிளந்தான் தும்பாட்டில் உள்ள குடிநுழைவு மற்றும் சுங்கத்துறை அலுவலகங்களை பார்வையிட்ட பின்னர், அமிர் ஹம்சா செய்தியாளர்களிடம் பேசினார்.

அனைத்து அரசு நிறுவனங்கள் மேற்கொள்ளும் டீசல் கசிவுக்கு எதிரான கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், டீசல் கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பாக புகார் அளிக்க வேண்டும் என்றும் அமிர் ஹம்சா பொது மக்களை அறிவுறுத்தினார்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)