பொது

சொத்துடைமை மோசடி; நிறுவன முன்னாள் இயக்குநர் மீது நான்கு புகார்கள்

15/07/2024 06:33 PM

பட்டர்வெர்த், 15 ஜூலை (பெர்னாமா) -- ஒரு நிறுவனத்திற்கு சொந்தமான சுமார் 96 ஆயிரத்து 780 ரிங்கிட் மத்திப்புடைய சொத்துகளை கடந்த பத்து ஆண்டுகாலமாக முறைகேடாகப் பயன்படுத்தியது தொடர்பில், இன்று பட்டர்வெர்த் செஷன் நீதிமன்றத்தில் தம் மீது சுமத்தப்பட்ட நான்கு குற்றச்சாட்டுகளையும் நிறுவன முன்னாள் இயக்குநர் ஒருவர் மறுத்தார்.

நீதிபதி சுல்ஹஸ்மி அப்துல்லா முன்னிலையில் வாசிக்கப்பட்ட அக்குற்றச்சாட்டுகளை 51 வயதுடைய கமாருஸ்சமான் கமாலுடின் என்பவர் மறுத்து விசாரணைக் கோரினார்.

அச்சமயத்தில் 'Northern Petrochem' நிறுவனத்தின் இயக்குநராக பணி புரிந்த கமாருஸ்சமான், 'Natureceuticals' நிறுவனத்திற்குச் சொந்தமான சொத்துகளை குறிப்பாக 5,600, 920, 8,800 மற்றும் 81,460 ரிங்கிட் ரொக்கத்தை தனித்தனி காலக்கட்டத்தில் மோசடி செய்ததாக அவர் மீதான நான்கு குற்றங்களும் வாசிக்கப்பட்டது.

2014-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி தொடங்கி 2015-ஆம் ஆண்டு மே 27-ஆம் தேதி வரையில், பிறை தாமான்  இன்டெரவசியில் உள்ள RHB வங்கி, செபராங் ஜயாவில் உள்ள Am வங்கி, அல்மா ரொசான் வணிக மையத்தில் உள்ள Am வங்கி மற்றும் ஜாலான் ஜெலுத்தோங்கில் உள்ள PUBLIC வங்கி ஆகிய நான்கு வெவ்வேறு இடங்களில் அவர் இக்குற்றத்தைப் புரிந்ததாகக் கூறப்படுகிறது.

குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 403-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுவதால், குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஐந்து முதல் ஆறு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, பிரம்படி மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

வழக்கை செவிமடுத்த நீதிபதி சுல்ஹஸ்மி, ஒவ்வொரு குற்றத்திற்கும் தனித்தனியாக நான்காயிரம் ரிங்கிட் ஜாமினில் அவரை விடுவிக்க அனுமதி அளித்தார்.

மேலும், மாததிற்கு ஒரு முறை எஸ்.பி.ஆர்.எம் அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் வழக்கு நிறைவடையும் வரை கடப்பிதழை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)