உலகம்

இம்ரான் கானின் கட்சியைத் தடை செய்ய பாகிஸ்தான் அரசாங்கம் திட்டம்

16/07/2024 05:01 PM

பாகிஸ்தான், 16 ஜூலை (பெர்னாமா) -- பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சியைத் தடை செய்ய அந்நாட்டு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக நிதி பெற்றதோடு, கடந்தாண்டில் தாம் கைது செய்யப்பட்டபோது நாடு தழுவிய கலவரங்களைத் தூண்டிவிட்ட குற்றச்சாட்டுகளுக்காக இம்ரான் கான் சிறைத் தண்டனையை அனுபவித்து வருகிறார்.

இந்நிலையில், இம்முடிவு எடுக்கப்பட்டிருப்பதைப் பாகிஸ்தான் தகவல் அமைச்சர் திங்கட்கிழமை உறுதிப்படுத்தினார்.

கடந்த 2022-ஆம் ஆண்டு, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான் கானிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பிற்குப் பிறகு அந்நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியை, இம்முடிவு மேலும் மோசமடையச் செய்வதற்கான வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தம் மீது தொடுக்கப்பட்ட வழக்குகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று இம்ரான் கான் கூறினாலும் தற்போதைய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் முக்கிய போட்டியாளரான அவர் பிரபலமான நபராகவே கருதப்படுகிறார்.

எனினும், இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சிக்கு எதிராக அரசாங்கத்திடம் போதுமான ஆதாரங்கள் இருப்பதாக அந்நாட்டு தகவல் அமைச்சர் அத்தாவுல்லாஹ் தரார் கூறியுள்ளார்.

அக்கட்சி, வெளிநாடுகளில் உள்ள மக்கள் மற்றும் குழுக்களிடமிருந்து பணம் பெறுவதாக அரசாங்கம் நீண்ட காலமாக குற்றஞ்சாட்டி வருகிறது.

பாகிஸ்தான் சட்டப்படி, அரசியல் கட்சிகள் அத்தகைய நன்கொடைகளைப் பெறுவதற்கு அனுமதி இல்லை.

பாகிஸ்தான் அரசியலமைப்பின் கீழ் அரசாங்கம் அக்கட்சியைத் தடை செய்ய முடியும் என்றாலும், அந்த முடிவு எடுப்பதற்கு உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதலைப் பெற அனுப்பப்படும் என்று தரார் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)