பொது

ஈஷாவின் மரண வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்

16/07/2024 08:19 PM

கோலாலம்பூர், 16 ஜூலை (பெர்னாமா) -- ஏ. ராஜேஸ்வரி அல்லது ஈஷாவின் மரணத்துடன் தொடர்புடைய லாரி ஓட்டுநர் ஒருவரும் ஆதரவற்றோர் இல்ல உரிமையாளரும் இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.

கடந்த ஜூன் 30-ஆம் தேதி இரவு 10.12 மணிக்கு “@dulal_brothers_360” என்ற பெயரைக் கொண்ட டிக் டோக் செயலி மூலம் பிறர் மனதை புண்படுத்தும் நோக்கத்தில், வேண்டுமென்றே ஆபாச உள்ளடக்கத்திலான பதிவைச் செய்ததை லாரி ஓட்டுநரான 40 வயதுடைய பி. சதிஷ்குமார் ஒப்புக் கொண்டுள்ளார்.

செந்தூல், ஜாலான் ஈப்போவில், கடந்த ஜூன் 30-ஆம் தேதி இரவு 10.15 மணிக்கு அவர்கள் அச்செயலைப் புரிந்துள்ளனர்.

1998-ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம், Seksyen 233(1)(a), அதே சட்டம் Seksyen 233(3)-இன் கீழ் அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 50,000 ரிங்கிட் அபராதம் அல்லது ஓரண்டிற்கு குறையாத சிறைத் தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படும். 

மேலும், குற்றஞ்சாட்டப்பட்டப் பின்னரும், அக்குற்றத்தைத் தொடரும் ஒவ்வொரு நாளும் 1,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படலாம்.

அதே பெயர்கொண்ட டிக் டோக் கணக்கு, நேரம் மற்றும் இடத்தில், ஈஷாவின் தாயாரான 56 வயதுடைய பி.ஆர். புஷ்பாவின் தாயாரை அவமதிக்கும் மற்றும் தொந்தரவு செய்ததாக சதிஷ்குமார் சுமத்தப்பட்ட இரண்டாவது குற்றச்சாட்டை அவர் மறுத்து விசாரணை கோரினார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் ஐந்தாண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 509 கீழ் இரண்டாவது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வழக்கு நிறைவடையும் வரை அவரின் கடப்பிதழை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்பதோடு, மாதத்திற்கு ஒரு முறை அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு சென்று கையொழுத்திட வேண்டும் என்ற கூடுதல் நிபந்தனையுடன் இவ்விரு குற்றச்சாட்டிற்கும், சதிஷ்குமாரை 36,000 ரிங்கிட் ஜாமீன் தொகையில் விடுவிக்க நீதிபதி சித்தி அமினா கசாலி அனுமதி அளித்தார்.

தமது அடுத்த வழக்கு விசாரணையின்போது தம்மை பிரதிநிதிக்க வழக்கறிஞர் வேண்டும் என்று குற்றஞ்சாட்டப்பட்டவர் கேட்டுக் கொண்டதால், இவ்வழக்கின் மறு செவிமடுப்பு ஆகஸ்ட் 16-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இதே வழக்கில், நிம்மதியை சீர்குலைத்து சினத்தை மூட்டும் நோக்கத்தில் 'alphaquinnsha' என்ற பெயர்கொண்ட டிக் டோக் கணக்கு வழி, வேண்டுமென்றே கடுமையான வார்த்தைகளைப் பேசிய குற்றத்தை ஒப்புக் கொண்ட ஆதரவற்றோர் இல்ல உரிமையாளரான 35 வயதுடைய பி. ஷாலினிக்கு இன்று கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அதிகபட்சம் 100 ரிங்கிட் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)