பொது

ஆங்கில ஆற்றலை மேம்படுத்த உள்நாட்டு ஆங்கில மொழி ஆசிரியர்களுக்கு அழைப்பு

16/07/2024 06:34 PM

கோலாலம்பூர், 16 ஜூலை (பெர்னாமா) -- நாட்டிலுள்ள மாணவர்கள் மத்தியில் ஆங்கில மொழிப்பாட ஆற்றலை மேம்படுத்த கல்வி அமைச்சு, உள்நாட்டு ஆங்கில மொழி ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

ஆங்கில மொழி கற்றல் மற்றும் கற்பித்தலை மேம்படுத்த ஓய்வுப்பெற்ற ஆசிரியர்கள் அமைச்சுக்கு அதிகம் உதவியதாக கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்தார்.

''உதாரணமாக, அறிமுகப்படுத்தப்பட்ட 'HIP Mentor' திட்டம், பள்ளிகளில் ஆங்கில மொழி சூழலை ஏற்படுத்துவதற்கு உதவ ஓய்வுப்பெற்ற ஆசிரியர்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஒரு திட்டமாகும். இத்திட்டத்தின் வழி, ஆங்கில மொழி தொடர்பிலான கவரக்கூடிய பல்வேறு அணுகுமுறைகளும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன,'' என்றார் அவர்.

இன்று, மக்களவையில் அமைச்சர்களின் கேள்வி நேரத்தின்போது தெப்ராவ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜிம்மி புவா வீ சீ எழுப்பிய கூடுதல் கேள்விக்கு ஃபட்லினா அவ்வாறு பதிலளித்தார்.

சம்பந்தப்பட்ட அம்முயற்சியில், சிங்கப்பூரைச் சேர்ந்த அல்லது ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் தன்னார்வலர்களாக கலந்து கொள்ள விரும்பினால் தங்கள் தரப்பு பெரிதும் வரவேற்பதாக அவர் கூறினார்.

மேலும், சிங்கப்பூரிலிருந்து ஆங்கில மொழி ஆசிரியர்களைக் கொண்டு வருவது தொடர்பிலான அரசாங்கத்தின் சிறப்பு திட்டத்தை தமது அமைச்சு இன்னும் ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)