பொது

DEFA: அடுத்தாண்டு ஏற்று நடத்த மலேசியா நம்பிக்கை

16/07/2024 04:18 PM

கோலாலம்பூர், 16 ஜூலை (பெர்னாமா) -- டேஃபா எனப்படும் ஆசியான் இலக்கவியல் பொருளாதார கட்டமைப்பு ஒப்பந்தம், அடுத்த ஆண்டு தான் ஏற்று நடத்தும் ஆசியான் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று மலேசியா நம்பிக்கை கொண்டுள்ளது.

முதன்மை இலக்கவியல் பொருளாதாரமாக ஆசியான் மாறுவதை விரைவுபடுத்தும் அதேவேளையில், போட்டியாற்றல் கொண்ட முழுமையான மற்றும் லாபகரமான வட்டாரத்தை உருவாக்குவதை டேஃபா நோக்கமாகக் கொண்டுள்ளதாக முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோ ஶ்ரீ சஃப்ருல் தெங்கு அப்துல் அசிஸ் கூறினார்.

''ஆசியான் இலக்கவியல் பொருளாதாரக் கட்டமைப்பு ஒப்பந்தம் டேஃபா, இதை நீங்கள் அறியாதவராக இருந்தால் தெரிந்திருக்க வேண்டும், ஏனென்றால் ஆசியான் மற்றும் உற்பத்தி, வர்த்தகம், இலக்கவியல் வர்த்தகம் பற்றி நாம்பேசும்போது, ​​வர்த்தகத்தை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கப் போகிறது. ஆசியானுக்கு மற்றும் இலக்கவியல் பொருளாதாரத்தைப் பார்த்தால், அது 3 மடங்கு வளர்ச்சியடைந்து 2030-ஆம் ஆண்டுக்கு 1 லட்சம் கோடி அமெரிக்க டாலரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,'' என்றார் அவர்.

கோலாலம்பூரில், இன்று நடைபெற்ற 2024 ஆசியான் உற்பத்தி இளையோர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போது சஃப்ருல் அதனைக் கூறினார்.

இந்நடவடிக்கை, வட்டார இலக்கவியல் ஒருங்கிணைப்பு, வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு வழி வகுக்கும் என்றும் அடுத்த ஆண்டு ஆசியானுக்கு மலேசியா தலைமை வகிப்பதற்கும் ஆதரவு அளிக்கும் என்றும் அவர் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)