பொது

பான் போர்னியோ: முன் தகுதி செயல்முறை சிறந்த குத்தகையாளரைத் தேர்ந்தெடுக்க உதவும்

16/07/2024 04:19 PM

கோலாலம்பூர், 16 ஜூலை (பெர்னாமா) -- தற்போது சபா, பான் போர்னியோ நெடுஞ்சாலை திட்டத்தின் ஒவ்வொரு கட்ட அமலாக்கத்திலும் மேற்கொள்ளப்படும் முன் தகுதி செயல்முறை, பொதுப்பணி அமைச்சு சம்பந்தப்பட்ட திட்டத்தின் கட்டுமானத்திற்குச் சிறந்த குத்தகையாளரைத் தேர்வு செய்ய உதவும் என்று அவ்வமைச்சு நம்புகின்றது.

குத்தகை செயல்முறை மிகவும் பொதுவாக இருப்பதையும் அந்த வாய்ப்பைச் சில நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்வதையும் தவிர்க்க இச்செயல்முறை மேற்கொள்ளப்படுவதாக பொதுப்பணி அமைச்சர் டத்தோ ஶ்ரீ அலெக்சண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.

''ஆனால், நாங்களும் அனுபவமுள்ளவர்கள்தான். முன் தகுதி இல்லாமல் மிகவும் பொதுவாக இருந்தால் வசதியில்லாத, தகுதியில்லாத நிறுவனங்கள் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி குத்தகையில் இணைந்து போலி ஏலத்தில் ஈடுபடலாம். எங்களுக்குப் பிரச்சனையாக இருக்கும். நாங்கள் முன் தகுதியைச் சிறந்த முறையில் மேற்கொள்வோம்'', என்றார் அவர்.

இன்று, மக்களவையில் அமைச்சர்களின் கேள்வி நேரத்தின்போது செம்போர்னா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ ஷாஃபியி அப்டால் எழுப்பிய கூடுதல் கேள்விக்கு டத்தோ ஶ்ரீ அலெக்சண்டர் நந்தா லிங்கி அவ்வாறு பதிலளித்தார்.

தகுதியான நிறுவனம் மட்டுமே நியமிக்கப்படுவதை உறுதிசெய்ய சபா LPB திட்டத்திற்கான ஒவ்வொரு கட்டத்திலும் குத்தகையாளர் தேர்வை நிதி அமைச்சு ஆராயவிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)