பொது

சிங்கப்பூருக்கு விற்கப்படும் சுத்திகரிக்கப்படாத நீர் விவகாரம்; ஒப்பந்தங்கள் மறு ஆய்வு செய்யப்படுகிறது

16/07/2024 06:44 PM

பங்சார், 16 ஜூலை (பெர்னாமா) -- 1962-ஆம் ஆண்டு தொடங்கி, ஒவ்வொரு 1,000 கலன் சுத்திகரிக்கப்படாத நீர், 3 சென் விகிதத்தில் சிங்கப்பூரிடம் விற்கப்படும் விவகாரம் தொடர்பான அனைத்து ஒப்பந்தங்களையும் அரசாங்கம் மறு ஆய்வு செய்து வருவதாக துணை பிரதமர் டத்தோ ஶ்ரீ ஃபடில்லா யூசோப் தெரிவித்தார்.

அவ்விவகாரம் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முஹமட்டின் தலைமைத்துவம் முதலே இருந்து வருவதாக எரிசக்தி மாற்றம் மற்றும் நீர் உருமாற்ற அமைச்சருமான அவர் கூறினார்.

1962-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு 1,000 கலன் நீரையும் 3 சென் விகிதம் என்று நாளொன்றுக்கு 25 கோடி கலன் சுத்திகரிக்கப்படாத நீரை 61 ஆண்டுகளாக சிங்கப்பூருக்கு மலேசியா மானியமாக வழங்கி வருவதாக கடந்த வெள்ளிக்கிழமை டாக்டர் மகாதீர் கூறியிருப்பது குறித்து விளக்கமளித்த ஃபடில்லா அவ்வாறு குறிப்பிட்டார்.

"துன் எம்-இடமே திரும்பக் கேட்க வேண்டும். அவர் பிரதமராக இருந்தபோதே இது நடந்துள்ளது. நாம் உதவித் தொகை வழங்குகிறோமா அல்லது இல்லையா என்பது குறித்து அனைத்து ஒப்பந்தங்களையும் மீண்டும் பார்த்து வருகிறோம். சரியா," என்றார் அவர்.

இன்று கோலாலம்பூரில், 2024-ஆம் ஆண்டு நீர் மலேசியா சிறப்பு மாநாடு மற்றும் கண்காட்சியை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஃபடில்லா அவ்வாறு கூறினார்.

2061-ஆம் ஆண்டு நிறைவடையும் 1962-ஆம் ஆண்டு ஜோகூர் ஆற்று நீர் ஒப்பந்தத்தின்படி சிங்கப்பூருக்கு நாளொன்றுக்கு 25 கோடி கலன் சுத்திகரிக்கப்படாத நீர், ஒவ்வொரு 1,000 கலனும் 3 சென்னுக்கு வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல சுத்திகரிக்கப்பட்ட நீரை மலேசியா ஒவ்வொரு 1,000 கலனும் 50 சென்னில் வாங்கவும் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)