சிறப்புச் செய்தி

குழந்தைகளின் உடல்வளர்ச்சியோடு மனவளர்ச்சியிலும் பெற்றோர் அக்கறைக் கொள்ள வேண்டும்

17/07/2024 07:49 PM

கோலாலம்பூர், 17 ஜூலை (பெர்னாமா) -- குழந்தைகளின் வளர்ச்சியில் அக்கறை செலுத்தும் பெற்றோர்கள் பலர், அவர்களின் மனவளர்ச்சி பற்றி தெரிந்து வைப்பதில்லை.

ஒரு குழந்தை வளரும் போது மனம், உடல் மற்றும் அறிவாற்றல் ஆகிய மூன்றிலும் வளர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஒரு குழந்தை, இதுபோன்ற வளர்ச்சிகளை எட்டாமல் இருக்க, அதனால் ஏற்படும் ஒருவகை மரபணு கோளாறே, இந்த மனவளர்ச்சி குறைபாடு ஏற்படுவதற்குக் காரணம் என்கிறார், மனவளர்ச்சி குறைபாடு சம்பந்தப்பட்ட துறையில் 12 ஆண்டுகள் நிபுணத்துவம் பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் விஜய் ஆனந்த்.

''90 விழுக்காடு மனவளர்ச்சி குறைப்பாடு ஏற்படுவதற்கான காரணம் என்னவென்றால் உடம்பில் குறிப்பாக மூளையில் ஆக்சிஜன் அளவு சீராக இயங்காமல் போவது'', என்றார் அவர்.

தன்னுடைய 12 ஆண்டு கால அனுபவத்தில் சுமார் 3,300 மனவளர்ச்சி குறைபாடு கொண்ட குழந்தைகளைத் தான் சந்திப்பதாகவும், அதற்கென சில அடிப்படை காரணங்கள் இருப்பதாகவும் அவர் கூறினார்.

''குழந்தை உருவான நாள் முதல் பிறக்கும் வரையில், நிமிடமல்ல, மணிநேரமல்ல மாறாக சிறு வினாடிக்குள் இந்த ஆக்சிஜனின் சீரற்ற நிலையில் நிகழ்ந்து விடுகின்றது'', என்று அவர் கூறினார்.

இந்நோய்கான அறிகுறிகள் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்காது என்றாலும், பொதுவான சில அறிகுறிகளை அவர்களின் இளவயதிலேயே பெற்றோர்களால் அடையாளம் காண முடியும் என்கிறார் டாக்டர் விஜய்.

இதனிடையே, மூன்று வயதில் தன் குழந்தைக்கு மனவளர்ச்சி குறைபாடு இருப்பதைக் கண்டறிந்து அதன்பின் அதற்கான சிகிச்சைகளை வழங்கி வரும் பெற்றோர் ஒருவர் நம்மோடு இவ்வாறு பகிர்ந்து கொள்கிறார்.

"மகனுக்கு மூன்று வயது இருக்கும்போது நாங்கள் இதனை கண்டறிந்தோம். பள்ளிக்கூடத்தில் சேர்த்தோம். அதைத்தாண்டி நாங்கள் பார்க்காத மருத்துவர் இல்லை. கொடுக்காத வைத்தியம் இல்லை", என்று அவர் கூறினார்.

3 முதல் 5 வயதுக்குட்ட கால கட்டமே மனவளர்ச்சி குறைபாடு கொண்ட குழந்தைகளின் மனநிலையை மேம்படுத்த சரியான தருணங்களாகும்.

அந்த பொன்னான நேரத்தை இழந்தாலோ அல்லது அறியாமல் போனாலோ, அந்த குறைப்பாட்டிலிருந்து பிள்ளைகளை மீட்டெடுப்பதில் சிரமத்தை எதிர்நோக்க வேண்டி வரும்.

எனவே, பெற்றோர்கள் அதனை கருத்தில் கொண்டு விழிப்புணர்வுடன் காலமறிந்து செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)