சிறப்புச் செய்தி

50,000 ரிங்கிட் திவாலானவர்களை மீட்க அரசாங்கத்தின் 'இரண்டாம் வாய்ப்புக் கொள்கை'

17/07/2024 07:52 PM

கோலாலம்பூர், 17 ஜூலை (பெர்னாமா) -- புற்றுநோய், இருதயக் கோளாறு, மனநலப் பிரச்சனை உட்பட 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் அரசாங்கத்தின் பேறு குறைந்த அட்டை வைத்திருக்கும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு கடன் வழங்கிய தரப்பினர்...

குறிப்பிட்ட காலக்காட்டத்திற்குப் பின்னர் அதனை மீண்டும் பெறுவதில் அவர்களுக்கு அழுத்தம் கொடுக்கக் கூடாது.

ஏனெனில், நாட்டில் திவால் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் சிலர் தற்போது உயிரோடும் இல்லை.

எனவே, இத்தகையோரின் நிலைப்பாட்டை திவால் துறைக்கு தெரிவித்தால் மட்டுமே, அவர்களின் பெயர், திவால் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு தமது தரப்பு பரிசீலிக்கும் என்று சிலாங்கூர் திவால் துறை இயக்குநர் பவானி காசி தெரிவித்தார்.

''சம்பந்தப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களோ அல்லது உறவினர்களோ வந்து எங்களிடம் தெரிவித்தால் மட்டுமே அதைப் பரிசீலித்து அவர்களின் பெயரை திவால் பட்டியலில் இருந்து நீக்க நாங்கள் முனைவோம். அதில் நாள்பட்ட நோயுள்ளவர்கள் அரசாங்க மருத்துவரிடம் முறையாக கடிதம் பெற்றிருந்தால் மட்டுமே அவர்களின் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படும்,'' என்று அவர் விவரித்தார்.

இது இவர்களுக்கு மட்டுமின்றி, பொதுவாக திவால் நிலையை அடைந்த மற்றவர்களும் தமது அலுவலத்திற்கு வந்து அவர்களின் நிலைப்பாட்டை விவரித்தால் ஏதாவதொரு வழியில் அவர்களை அதிலிருந்து மீட்க தமது அதிகாரிகள் உதவுவார்கள் என்றும் பவானி கூறினார்.

இவ்வாண்டு திவால் துறை மேற்கொண்ட கணக்கெடுப்பில், தனிப்பட்ட கடன்  பெற்றவர்களும் வர்த்தகக் கடன் பெற்றவர்களுமே திவாலானவர்களின் பட்டியலில் முன்னிலையில் உள்ளனர்.

அவர்களைத் தவிர்த்து வாகனம் வாங்குபவர்களுக்கு உத்தரவாதம் அளிப்போர், வீட்டுக் கடன், மற்ற நிறுவனங்களுக்கு உத்தரவாதியாக இருப்போர் ஆகியோரும் திவால் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக அவர் கூறினார்.

மேலும் வயது வாரியாக எடுத்த கணக்கெடுப்பில், கடந்த 2022-ஆம் ஆண்டைக் காட்டிலும் இவ்வாண்டில் 25 வயதுக்கு கீழ்ப்பட்டவர்கள் குறைவான அளவிலேயே திவால் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் மட்டுமின்றி மற்ற வயதுப் பிரிவினரின் எண்ணிக்கையும் 2022-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறைவாகவே பதிவு செய்யப்பட்டுள்ளதாக பவானி விவரித்தார்.

இந்நிலை இன்னும் குறைய வேண்டும் எனும் நோக்கில், DASAR PELUANG KEDUA எனப்படும் இரண்டாம் வாய்ப்புக் கொள்கையின் கீழ் இவ்வாண்டு சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேரை திவால் நிலையிலிருந்து நீங்க மடானி அரசாங்கம் எண்ணம் கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

''ஐம்பாதாயிரம் ரிங்கிட்டும் குறைவான கடன்பட்டு திவாலானவர்கள் எங்களிடம் முறையாக விண்ணப்பித்தால் அவர்களை அதிலிருந்து மீட்க நாங்கள் தயாராக உள்ளோம். இன்னும் நிறைய பேருக்கு குறிப்பாக இந்திய சமூகத்திற்கு இது பற்றி தெரியாமல் உள்ளது. அத்தகையோர் எங்களை நாடினால் அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்ய நாங்கள் தயார். இதற்கு வயதுக்கு கட்டுப்பாடு எதுவும் கிடையாது,'' என்றார் அவர்.

இவ்வாண்டு தொடங்கி இதுவரை சுமார் ஒரு லட்சத்து 5,918 பேர் திவாலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இத்திட்டத்தைத் தவிர்த்து நாற்பது வயதிற்கு கீழ்ப்பட்டவர்களும் இரண்டு லட்சம் ரிங்கிட்டை உட்படுத்து திவாலாகி இருந்தால் அவர்களின் பெயர்களையும் அப்பட்டியலில் இருந்து நீக்க திவால் துறை முடிவெடுத்துள்ளது.

எனவே, இந்த அரிய வாய்ப்பை இந்திய சமூக நன்முறையில் பயன்படுத்திக் கொண்டு திவால் பட்டியலில் இருந்து வெளியேறுமாறு பவானி கேட்டுக் கொண்டார்.

மேலும் விவரங்களுக்கு www.mdi.gov.my என்ற அகப்பக்கத்திலோ அல்லது 03-8885 1000 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)