பொது

வாடிக்கையாளரை அனுப்பச் சென்ற இ-ஹெய்லிங் ஓட்டுநரை காணவில்லை

18/07/2024 07:19 PM

ஈப்போ, 18 ஜூலை (பெர்னாமா) -- கடந்த ஜூலை 11-ஆம் தேதி வாடிக்கையாளரை கோலாலம்பூரிலிருந்து தெலுக் இந்தானுக்கு அனுப்பிய பிறகு காணாமல் போனதாகக் கூறப்படும் இ-ஹெய்லிங் ஓட்டுநர் குறித்த எந்தவொரு புகாரையும் தமது தரப்பு பெறவில்லை என்று பேராக் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அசிசி மாட் அரிஸ் தெரிவித்தார். 

எனினும், சம்பந்தப்பட்ட அந்த 33 வயதுடைய நபர் இன்னமும் பேராக் மாநிலத்தில் இருப்பதற்கான ஆதாரம் இருந்தால் இது தொடர்பிலான ஒத்துழைப்பை வழங்க தமது தரப்பு தயாராக உள்ளதாக டத்தோ அசிசி கூறினார். 

தெலுக் இந்தானுக்கு வாடிக்கையாளரை அனுப்பச் செல்வதாக தமது குடும்ப உறுப்பினர் ஒருவரிடம் வட்ஸெப் செயலியின் மூலம் தெரிவித்ததாகவும், அதன் பின்னர் கோலாலம்பூர், பண்டான் இண்டாவில் வசிக்கும் ஷாருல் அஷ்ராஃப் டாஹ்லான் எனும் அந்நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் என்று அசிசி விவரித்தார்.

இந்நிலையில், அந்நபரை காணவில்லை என்று அவரின் குடும்ப உறுப்பினர் ஒருவர் ஜூலை 12-ஆம் தேதி பண்டான் இண்டா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]