பொது

மாமன்னர் தம்பதியருக்கு அமைச்சர்கள் வாழ்த்து

20/07/2024 05:24 PM

கோலாலம்பூர், 20 ஜூலை (பெர்னாமா) -- இன்று நடைபெற்ற 17-ஆவது மாட்சிமை தங்கிய மாமன்னரின் அரியணை அமரும் சடங்கை முன்னிட்டு அமைச்சர்கள், மாமன்னர் சுல்தான் இப்ராஹிமிற்கும் பேரரசியார் ராஜா சாரித் சொஃபியாவிற்கும் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

சுல்தான் இப்ராஹிமின் ஆட்சிக்கு கடவுளின் ஆசி கிடைக்க தாம் வேண்டிக் கொள்வதாக துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி முகநூல் வழியாக தமது வாழ்த்தைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

மலேசியாவை வளர்ச்சியடைந்த ஒரு நாடாக உருவாக்க, மாமன்னருக்கு எப்போதும் கடவுளின் ஆசி கிடைக்க வேண்டும் என்று தாம் பிரார்த்திப்பதாக துணை பிரதமர் டத்தோ ஶ்ரீ ஃபடில்லா யூசோப் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சுல்தான் இப்ராஹிமின் ஆட்சிக்கு கடவுளின் ஆசீர்வாதம் கிடைக்க தாம் பிரார்த்தித்துக் கொள்வதாக தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தமது வாழ்த்து செய்தியில் கூறினார்.

மாமன்னர் கடவுளின் ஆசியில் நலமாக வாழ தாம் வேண்டிக் கொள்வதாக சட்ட மற்றும் கழக சீர்திருத்தத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அசாலினா ஒத்மான் சைட் தமது முகநூல் வழியான வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டார்.

மலேசியாவில் உள்ள அனைத்து இனங்களின் ஒருமைப்பாட்டின் அடையாளமாகவும் இஸ்லாத்தை பாதுகாப்பவராகவும் மாமன்னர் விளங்க வேண்டும் என்று விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் சாபு வாழ்த்தினார்.

நாட்டை மேம்பாடு, அமைதி, சுபீட்சம் ஆகிய வழியில் வழிநடத்த கடவுள் மாமன்னருக்கு ஆரோக்கியத்தையும் ஆற்றலையும் வழங்க வேண்டும் என்றும் தாம் வேண்டிக் கொள்வதாக கூட்டரசு பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டாக்டர் சலிஹா முஸ்தாபா தமது முகநூல் வழியான வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)