பொது

பொருளாதார வளர்ச்சி 5.8 விழுக்காடு; வலுவான மேம்பாட்டிற்கு வழிவகுக்கும்

20/07/2024 06:47 PM

கோலாலம்பூர், 20 ஜூலை (பெர்னாமா) -- 2024ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் மலேசியாவின் பொருளாதார வளர்ச்சி 5.8 விழுக்காடாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள வேளையில், அது நாட்டின் வலுவான மேம்பாட்டிற்கு வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது.

மடானி பொருளாதாரத்தின் கீழ், இலக்கவியல் மற்றும் ஆற்றல் மாற்றத்தை நோக்கி நாட்டை வழிநடத்துவதில் மேலும் சிறந்த வேலை வாய்ப்புகள், பயிற்சிகள், தொழில்நுட்ப மாற்றம் ஆகியவற்றை உருவாக்க அரசாங்கம் உறுதியளிப்பதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

அனைத்து தரப்பினரும் முன்வைத்த வழக்கமான எதிர்பார்ப்புகள் மற்றும் கணிப்புகளுக்கு அப்பாற்பட்டு, 2024ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் மலேசியா 5.8 விழுக்காட்டு பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக பிரதமர் தமது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

2024ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, அதற்கு முந்தைய காலாண்டில் பதிவு செய்யப்பட்ட 4.2 விழுக்காட்டை காட்டிலும் அதிகரித்து 5.8 விழுக்காடாக பதிவாகி இருக்கும் தகவலை மலேசிய புள்ளிவிவரத்துறை, டி.ஓ.எஸ்.எம் நேற்று குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில், மடானி பொருளாதாரத்தில் நம்பிக்கை வைத்துள்ள பொது மக்கள், ஊழியர்கள், தொழில் நிபுணர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு அன்வார் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

''பொதுமக்களுக்கு நன்றி, தொழில் நிபுணர்களுக்கு நன்றி, முதலீட்டாளர்களுக்கு நன்றி,'' என்றார் அவர்.

2024ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான பொருளாதார வளர்ச்சி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் ஆகஸ்ட் 16ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று டி.ஓ.எஸ்.எம் அகப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)