பொது

மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான கொள்கைகளை உருவாக்க அரசாங்கம் உறுதி

20/07/2024 06:41 PM

கோலாலம்பூர், 20 ஜூலை (பெர்னாமா) -- நாட்டின் மாண்பை உயர்த்தி, மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் கொள்கைகளை உருவாக்க அரசாங்கம் கடப்பாடு கொண்டுள்ளது.

மக்களின் சுமையைக் குறைப்பதற்கான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொள்ள முயற்சிக்கும்படி மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் வலியுறுத்தியதற்கு ஏற்ப அவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் எடுத்துரைத்தார்.

''பிரச்சனைகள் குறிப்பாக வாழ்க்கைச் செலவினம் தொடர்பான விவகாரங்களில் கவனம் செலுத்துமாறு மாமன்னர் வலியுறுத்தியிருப்பதற்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம். அது நிச்சயம் மாமன்னரின் மனதிற்கு நெருக்கமானதாக இருக்கும். அரசாங்கத் தரப்பை பொருத்தவரை அந்த அம்சத்திற்கே முக்கியத்துவம் அளிக்கப்படும்,'' என்றார் அவர்.

மாமன்னரின் அரியணை அமரும் சடங்கு குறித்து கருத்துரைத்த அச்சடங்கிற்கான சிறப்பு செயற்குழு தலைவருமான ஃபஹ்மி, இதுவரை நடைபெற்ற மூன்று நிகழ்சிகளும் திருப்தியளிக்கும் வகையில் அமைந்ததாக தெரிவித்தார்.

அந்த மூன்று நிகழ்ச்சிகளில், அரியணை அமரும் சடங்கை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட வெள்ளிக்கிழமை தொழுகையும் சிறப்பு சொற்பொழிவும் தேசிய பள்ளிவாசலில் நடைபெற்ற வேளையில், அரியணை அமரும் விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)