விளையாட்டு

விளையாட்டாளர்கள் குறித்து அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் பரப்புவதை நிறுத்துங்கள்

21/07/2024 03:58 PM

கோலா குபு பாரு, 21 ஜூலை (பெர்னாமா) --  2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் நாட்டின் விளையாட்டு வீரர்கள் குறித்து சமூக ஊடகங்களில் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் பரப்புவதை நிறுத்துமாறு இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னா யோ அனைத்து தரப்பினருக்கும் வலியுறுத்தி உள்ளார்.

அவ்வாறு செய்வதன் மூலம், அப்போட்டியில் களமிறங்கும் 26 விளையாட்டாளர்களும் கவனம் சிதறாமல் தங்களைப் போட்டிக்கு தயார்படுத்திக் கொள்ளும் அதேவேளையில், தங்களின் மன ஆரோக்கியத்தையும் பாதுகாத்து கொள்ள முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
    
கோலா குபு பாருவில், பூலோ திலோர் கிராமத்தின் பூர்வகுடி மக்களுடன், இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ், திட்டமிடப்பட்டுள்ள Satu Pemimpin Satu Kampung எனும் மடானி நிகழச்சியில் கலந்துகொண்டபோது, ஹன்னா யோ அதனைக் கூறினார்.

அந்த திட்டத்திற்காக,அக்கிராமத்தைத் தத்தெடுத்துக்கொள்ள கேபிஎஸ் தேர்வு செய்துள்ளது.

மேலும், அதன் வழி, அக்கிராமத்தில் உள்ள மக்களின் தேவைகள் மற்றும் சமூகப் பொருளாதாரப் பிரச்சனைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஹன்னா தெரிவித்தார்.

செபக் தக்ரா மற்றும் பூப்பந்து விளையாட்டுகளுக்காக, மைதானங்களை புதுப்பிக்கும் நடவடிக்கைக்கு 50,000 முதல் 100,000 ரிங்கிட் வரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, இந்த ஆண்டு செயல்படுத்தப்படும் முயற்சிகளில் ஒன்றாகும்.

2025 ஆம் ஆண்டில், 300,000 முதல் 400,000 ரிங்கிட் வரையிலான ஒதுக்கீட்டில் காற்பந்து மைதானங்கள் மறுசீரமைக்கப்படும் என்றும் ஹன்னா குறிப்பிட்டார்.


-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)