பொது

நூர் ஃபாராவின் கொலை வழக்கு; கிழங்குத் தோட்ட தொழிலாளர்களிடம் போலீசார் வாக்குமூலம்

21/07/2024 06:37 PM

கோலாலம்பூர், 21 ஜூலை (பெர்னாமா) -- கடந்த திங்கட்கிழமை உலு சிலாங்கூரில் நூர் ஃபாரா கார்த்தினி அப்துல்லாவின் சடலம் கண்டெடுக்கப்பட்டது தொடர்பில் விசாரணைக்கு உதவ சிலிம் ரிவரில் உள்ள கிழங்குத் தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களிடம் போலீசார் நேற்று வாக்குமூலம் பெற்றனர்.

சம்பவத்திற்கு முன்னதாக, சந்தேக நபர் அத்தோட்டத்திற்கும் இன்னும் சில இடங்களுக்கும் சென்றுள்ளது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கம்போங் கிலான் ஹால்ட்டி உள்ள அக்கிழங்குத் தோட்டத்திற்கு போலீசார் நேற்று மாலை விசாரணைக்காக சென்றிருந்தனர். 

இவ்விசாரணை குறித்து இன்று பெர்னாமா தொடர்பு கொண்டபோது, உலுசிலாங்கூர் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் டிஎஸ்பி முஹமட் அஸ்ரி முஹமட் யுனுஸ் அதை உறுதிப்படுத்தினார். 

கடந்த ஜூலை 10ஆம் தேதி காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட நூர் ஃபாரா கர்த்தினியின் சடலம் ஜூலை 15ஆம் தேதி ஏறக்குறைய மாலை மணி ஆறுக்கு உலுசிலாங்கூரில் உள்ள ஒரு செம்பனைத் தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்டது. 

அதைத் தொடர்ந்து, பேராக் மாநிலத்தில் போலீஸ் உறுப்பினராக பணியாற்றி வரும் 26 வயதுடைய ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டதோடு, விசாரணைக்காக திங்கட்கிழமை வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, நூர் ஃபாரா கொலை வழக்கின் விசாரணக்கு உதவ சந்தேக நபர்களின் தடுப்புக் காவலை நீட்டிக்க போலீசார் விண்ணப்பிக்கவிருக்கின்றனர்.

அதற்காக, அச்சந்தேக நபரை நாளை காலை கோலா குபு பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு கொண்டுச் செல்லவிருப்பதாக உலுசிலாங்கூர் மாவட்ட போலீஸ் துணை தலைவர் முஹமட் அஸ்ரி தெரிவித்தார்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)