பொது

வங்காளதேசத்திலுள்ள மலேசிய மாணவர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை - வெளியுறவு அமைச்சு

21/07/2024 06:36 PM

கோலாலம்பூர், 21 ஜூலை (பெர்னாமா) -- வங்காளதேசத்தில் தற்போதைய சூழ்நிலையைத் தொடர்ந்து, மலேசிய மக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதாக வெளியுறவு அமைச்சான விஸ்மா புத்ரா தெரிவித்துள்ளது.

வங்காளதேசத்தில் நிலவி வரும் பரபரப்பான சூழ்நிலையால் பாதிக்கப்பட்டுள்ள மலேசிய மாணவர்களின் பாதுகாப்பு கருதி, தூதரகக் கட்டடத்திற்கு அவர்கள் இடம் மாற்றப்பட்டுள்ளதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில், விஸ்மா புத்ரா உறுதிப்படுத்தியிருக்கிறது.

அங்குள்ள அண்மைய சூழ்நிலை கண்காணித்து வருவதோடு, தேவைப்பட்டால் அம்மாணவர்களை அங்கிருந்து வெளியேற்றுவது குறித்தும் அமைச்சும், டாக்காவில் உள்ள மலேசிய தூதரகமும் பரிசீலிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், வங்காளதேசத்தில் உள்ள மலேசிய மாணவர்கள் எப்போதும் அங்குள்ள தூதரக்கத்துடன் தொடர்பில் இருப்பதோடு, ஒத்துழைப்பும் நல்குமாறு அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும், வங்காளதேசத்தில் தங்களுக்கு உதவுவதாக உறுதியளிக்கும் நபர்களிடம் , எச்சரிக்கையாக இருக்குமாறும், செயல்பாட்டு அறையைத் தொடர்புகொண்டு எந்தத் தகவலையும் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் மலேசியர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

அதோடு, வங்காளதேசத்தில் உள்ள அனைத்து மலேசியர்களும் போராட்டப் பகுதிகளைத் தவிர்க்கவும், விழிப்புடன் இருக்கவும், தற்போதைய ஊரடங்கிற்கு ஏற்ப உள்ளூர் அதிகாரிகளின் உத்தரவைப் பின்பற்றவும் வலியுறுத்தப்படுகின்றனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)