பொது

புதிய மாமன்னர் நல்லிணக்கத்தைப் பேணி திறம்பட  நாட்டை வழிநடத்துவார்

21/07/2024 08:19 PM

கோலாலம்பூர், 21 ஜூலை (பெர்னாமா) -- ஜோகூர் மாநில சுல்தானாக ஆட்சி செய்த காலத்தில் இருந்தே இன மதம் பாராமல் அனைவரையும் அரவணைக்கும் ஆற்றல் கொண்ட சுல்தான் இப்ராஹிம், நாட்டின் 17-வது மாமன்னராக அரியணை அமர்ந்திருக்கும் வேளையில், அவர் மீதான எதிர்பார்ப்பு ஒட்டுமொத்த மக்களிடையே மேலோங்கி உள்ளது.

ஜோகூர் அரச பாரம்பரியத்தின் வழி, சிறந்த தலைமைத்துவ அனுபவத்தை கொண்ட அவர், நல்லிணக்கத்தைப் பேணிக் காத்து, திறம்பட நாட்டை வழிநடத்துவார் என்று அரசியல் ஆய்வாளர் முனைவர் கிருஷ்ணன் மணியம் நம்பிக்கை தெரிவித்தார்.

''மலேசியா முடியாட்சி இருக்கக்கூடிய ஒரு ஜனநாயக நாடாகும். இந்த ஜனநாயக நாட்டில் பேரரரசர் என்பவர் மிக முக்கிய அடையாளமாவார். நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் இவரே தலைவராக விளங்குவார். நாட்டின் அரசியல் அமைப்பு ஒரு நிலைப்பாடாக இல்லாவிடினும் நாட்டின் முடியாட்சி மிகவும் நேர்த்தியாக இருந்தால் அதுவே மக்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் என்பது உண்மை,'' என்று அவர் கூறினார்.

மக்களின் எதிர்ப்பார்ப்பை நன்கறிந்த மாமன்னர், தமது கடமைகளை நேர்மையுடனும் நம்பிக்கையோடும் நிறைவேற்றுவதாக இன்று உத்தரவாதம் அளித்துள்ளார்.

நடப்பு அரசாங்கம், மக்களிடையே பரிவு மனப்பான்மையோடு இருக்க வேண்டும் என்பதோடு மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்கள் மேலும் விரிவாக்கம் காண வேண்டும் என்றும் தமது பதவியேற்பின் போது மாமன்னர் கேட்டுக் கொண்டதை கிருஷ்ணன் சுட்டிக் காட்டினார்.

ஜோகூர் மாநிலத்தில் அவர் மேற்கொண்ட அனைத்து வளர்ச்சித் திட்டங்களையும் மாமன்னர் என்ற அடிப்படையில் நாடு முழுவதும் செயல்படுத்த சுல்தான் இப்ராஹிம் முனைவார் என்றும் கிருஷ்ணன் மணியம் தமது எதிர்பார்ப்பினை வெளிப்படுத்தினார்.

''மேலும் இவர் ஜோகூர் சொல்தானாக இருக்கும் போது மக்களுடன் இணைந்து பணியாற்றக் கூடிய சிறந்த தலைவராக வீற்றிருந்தார். சமையல் கலை, வாகனமோட்டும் திறன் ஆகியவற்றை மக்களிடையே வெளிப்படுத்தி மகிழ்ச்சி கொள்பவர் அவர்,'' என்றும் அவர் குறிப்பிட்டார். 

மேலும், தமது தாயாரின் பெயரில் நடத்திவரும் அறக்கட்டளை மூலமாக இந்திய சமூகத்திற்கும் பல்வேறு உதவிகளை அவர் அளித்து வந்ததையும் கிருஷ்ணன் நினைவுகூர்ந்தார்.

சிறந்த பண்புள்ளத்தோடு மக்களை மதிக்கும் தலைவராக விளங்கும் சுல்தான் இப்ராஹிம் நாட்டின் மறுமலர்ச்சிக்கும் மாற்றத்திற்கும் வித்தாக விளங்குவார் என்றால் அது மிகையாகது எனவும் அவர் புகழாரம் சூட்டினார்.

மாமன்னரின் அரியணை அமரும் விழாவை தொடர்ந்து கிருஷ்ணன் மணியம் பெர்னாமா செய்திகளிடம் அத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)