பொது

மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்த சுங்கை பூலோ நாடாளுமன்றம் தீவிரம் - ரமணன்

21/07/2024 07:46 PM

சுங்கை பூலோ, 21 ஜூலை (பெர்னாமா) -- சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில், எஸ்.பி.எம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற 226 மாணவர்களை, அதன் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ R. ரமணன் ராமகிருஷ்ணன், பேங்க் ராக்யாட் அறவாரியமான Y-B-R-ருடன் இணைந்து இன்று சிறப்பித்தார்.

ஒரு லட்சத்து 250 ரிங்கிட் ஒதுக்கீட்டை உட்படுத்திய அம்முயற்சி, மாணவர்களின் கல்வி சாதனையை மேம்படுத்துவதற்கு மேலும் துணைப் புரியும் என்று தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சருமான அவர்  நம்பிக்கைத் தெரிவித்தார். 

மாணவர்கள், குறிப்பாக சுங்கை பூலோ நாடாளுமன்றத்தில் கல்வித் தரத்தை மேம்படுத்துவதில், பேங்க் ராக்யாட் அறவாரியம் அளித்திருக்கும் இந்த வலுவான ஆதரவை தாம் பாராட்டுவதாக டத்தோ ரமணன் கூறினார்.

மாணவர்களின் எதிர்காலத்திற்கு பயன் தரும் இத்தகையத் திட்டங்களை  ஆண்டுதோறும் மேற்கொள்ளும் உன்னத முயற்சியின் வாயிலாக நாட்டின் கல்வி தரத்தை அடுத்த கட்டத்தை நோக்கி மேம்படுத்தவும் முடியும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

இன்று சுங்கை பூலோவில் உள்ள மெராந்தி மண்டபத்தில் நடைபெற்ற சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உதவிநிதி வழங்கும் நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்து உரையாற்றும்போது ரமணன் அவ்வாறு கூறினார்.


-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)