பொது

புதிய மேலவைத் தலைவராக அவாங் பீமீ நியமனம்

22/07/2024 04:11 PM

கோலாலம்பூர், 22 ஜூலை (பெர்னாமா) -- மக்களவையின் புதிய மேலவைத் தலைவராக செனட்டர் டத்தோ  அவாங் பீமீ அவாங் அலி பாசா நியமிக்கப்பட்டார்.

இன்று, மேலவைக் கூட்டம் தொடங்கியபோது அதன் துணைத் தலைவர், டத்தோ ஶ்ரீ நூர் ஜஸ்லான் முஹமட் அந்நியமனம் குறித்து அறிவித்தார்.

முன்னதாக, மேலவைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், டத்தோ அவாங் பீமீயை முன்மொழிந்ததாக நூர் ஜஸ்லான் கூறினார்.

"கூட்ட விதிமுறை 2(1)-க்கு இணங்க, ஒரு நபரின் பெயர் முன்மொழியப்பட்டதாக மக்களவைச் செயலாளர் எனக்கு தெரிவித்தார். 2024 ஜூலை 15-ஆம் தேதி மேலவை தலைவராக அந்நபர் நியமனம் செய்ய வேண்டும்", என்றார் அவர்.

சரவாக்கைப் பூர்வீகமாக கொண்ட அவாங் பீமீ, தேசிய சட்டத்தில் அந்தஸ்தும் அனுபவமும் பெற்றவர் என்று அவரின் பெயரை முன்மொழிந்தபோது அன்வார் தெரிவித்தார்.

"1984 இல் போர்னியோ சரவாக் உயர் நீதிமன்றத்தில் பணியாற்றியதோடு, கூட்டரசு நீதிமன்றம் உட்பட அனைத்து நீதிமன்ற நிலையில் பல்வேறு வழக்குகளை வழிநடத்தி அனுபவம் பெற்ற அவர், 1998 முதல் கூச்சிங் துறைமுக ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்", என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

கடந்த மே 10-ஆம் தேதி காலமான முன்னாள் மேலவைத் தலைவர் டத்தோ முதாங் தகாலை நினைவுகூரும் வகையில் ஒரு நிமிடம் மெளன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)