பொது

கூட்டரசு அரசியலமைப்பைத் தற்காத்து பேணிகாக்க உறுதிப் பூண்டார் புதிய மேலவைத் தலைவர்

22/07/2024 04:22 PM

கோலாலம்பூர், 22 ஜூலை (பெர்னாமா) -- 21-வது மேலவைத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் டத்தோ அவாங் பீமி அவாங் அலி பாசா, தமது கடமைகளை நேர்மையாக நிறைவேற்றுவதோடு மலேசியாவிற்குத் தமது முழு விசுவாசத்தையும் அளித்து, கூட்டரசு அரசியலமைப்பைத் தற்காத்து பேணிகாக்க உறுதிப் பூண்டுள்ளார்.

மேலவை உறுப்பினர்களால் வழங்கப்பட்டிருக்கும் இந்த பொறுப்பை மிகப் பெரிய கௌரவமாக தாம் கருதுவதாகவும், இன்று முதல் அமலாக்கம் காணும் தமது நியமனம், இன்று சரவாக் தினத்தை அனுசரிக்கும் அம்மாநிலத்திற்கும் சிறப்பு மிக்கது என்று அவாங் பீமி வர்ணித்துள்ளார்.

"இந்த எனக்கு மட்டும் வரலாற்றுமிக்க நாளால்ல. சரவாக் மாநிலத்தைச் சேர்ந்த எனக்கு வழங்கப்பட்ட கௌரவமும் அங்கீகாரமும் இதுவாகும். என்னை 21-வது மேலவைத் தலைவராக மலேசிய மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். அதோடு, இன்று சரவாக் மாநிலமும், காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுபட்ட தினத்தையும் கொண்டாடுகிறது", என்றார் அவர்.

கடந்த மே 10-ஆம் தேதி காலமான, டத்தோ முதாங் தகாலுக்குப் பதிலாக அவாங் பீமி நியமிக்கப்பட்டுள்ளார்.

2027-ஆம் ஆண்டு ஜூலை 14-ஆம் தேதி வரையில் மேலவை உறுப்பினராக பொறுப்பேற்க மாட்சிமை தங்கிய மாமன்னரின் ஒப்புதலைப் பெற்றதைத் தொடர்ந்து, ஜூலை 15-ஆம் தேதி, மேலவைத் துணைத் தலைவர் டத்தோ நூர் ஜஸ்லான் முஹமட் முன்னிலையில் அவாங் பீமி செனட்டராக பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

1996 முதல் 2011-ஆம் ஆண்டு வரையில், நங்க்கா சட்டமன்ற உறுப்பினராக மூன்று தவணைகள் அவர் சேவையாற்றியுள்ளார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)