பொது

PLKN 3.0: சிறப்பு பயிற்சி தொகுதி

22/07/2024 04:33 PM

கோலாலம்பூர், 22 ஜூலை (பெர்னாமா) -- PLKN 3.0 எனும் தேசிய சேவை பயிற்சி திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தவிருக்கும் மேம்படுத்தப்பட்ட பயிற்சிகள், நிரந்தர படை, சேமப்படை மற்றும் தன்னார்வ அமைப்புகளின் உறுப்பினர்களுக்கான சிறப்பு பயிற்சி தொகுதியாகும்.

17 முதல் 35 வயதிற்கு உட்பட்டவர்களுக்காக இந்த மேம்படுத்தப்பட்ட பயிற்சிகள் வழங்கப்படவிருப்பதாக தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் நோர்டின் தெரிவித்தார்.

"இந்த தன்னார்வ அமைப்புகள் மற்றும் சேமப்படை உறுப்பினர்களில், துணை போலீசார், துணை தீயணைப்பு வீரர்கள், பொது பாதுகாப்பு உறுப்பினர்கள், ரெலா, ருக்குன் தெத்தாங்கா போன்ற குழுவினரும் அடங்குவர். எங்களுக்குத் தெரிந்தவரை அவர்கள் இந்த குழுக்களில் சேரும்போது, ​​​​அவர்கள் வரையறுக்கப்பட்ட நடவடிக்கைகளில் மட்டுமே ஈடுபடுகிறார்கள். அவர்களில் பெரும்பாலோர் பயிற்சிக்குக் கூட உட்படுத்தப்படுவதில்லை", என்றார் அவர்.

இந்த கூடுதல் பயிற்சிகளின் வழியாக அவர்களுக்குத் தேசியம் மற்றும் இராணுவ அம்சங்களிலான PLKN பயிற்சி முறைகள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் முஹமட் காலிட் கூறினார்.

2025-ஆம் ஆண்டு ஜுன் அல்லது ஜூலை மாதத்தில் தொடங்கப்படும் PLKN 3.0, புதிய மேம்படுத்தப்பட்ட பயிற்சித் திட்டத்துடன் மூன்று கட்டங்களாக நடத்தப்படும்.

தொடக்கக் கட்ட PLKN, நான்காம் படிவ மாணவர்களை உட்படுத்தி புறப்பாட நடவடிக்கையின்போது, பள்ளிகளில் அமல்படுத்தப்படும்.

அடிப்படைக் கட்ட PLKN, 17 வயதிற்கு மேற்பட்ட பதின்ம வயதினரை உட்படுத்தியது ஆகும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)