பொது

நெங்கிரி வாக்காளர்கள் இலக்கு வைத்து அணுகப்படுவர்

22/07/2024 04:50 PM

கோலாலம்பூர், 22 ஜூலை (பெர்னாமா) -- நெங்கிரி சட்டமன்றத்தில் உள்ள வாக்காளர்களை இலக்கு வைத்து அணுகும் முறையை மேற்கொள்ள அதன் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான தேசிய முன்னணி மற்றும் நம்பிக்கை கூட்டணி ஒருங்கிணைப்புக் கூட்டம் முடிவெடுத்துள்ளது.

மேலும், இதற்கு முன்னதாக நடைபெற்ற இடைத் தேர்தலில்களில் மேற்கொள்ளப்பட்ட பொது பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படாது என்று ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின் செயலகத் தலைவர்  டத்தோ டாக்டர் அஷ்ராஃப் வஜ்டி டுசுக்கி தெரிவித்தார்.

"அதனால்தான், முதலில் எங்கள் உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் அடையாளம் காண நாங்கள் முன்பு விவாதித்தோம். தேசிய முன்னணியின் பட்டியலை நாங்கள் கொண்டுள்ளோம். நம்பிக்கை கூட்டணி அதன் பட்டியலையும் கொண்டுள்ளது. நாங்கள் அதை ஒன்றிணைப்போம். இதனால் ஒருவரும் விடுபடாமல் அனைத்து தேர்தல் கேந்திரங்களும் நெங்கிரியின் அனைத்து வாக்காளர்கள் மீதும் கவனம் செலுத்த முடியும்", என்றார் அவர்.

திங்கட்கிழமை, கோலாலம்பூர் டத்தோ ஓன் கட்டிடத்தில் நடைபெற்ற நெங்கிரி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான தேசிய முன்னணி மற்றும் நம்பிக்கை கூட்டணி ஒருங்கிணைப்புக் கூட்டத்திற்குப் பின்னர், டாக்டர் அஷ்ராஃப் அவ்வாறு கூறினார்.

நெங்கிரி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான தேசிய முன்னணி மற்றும் நம்பிக்கை கூட்டணியின் தேர்தல் கேந்திரங்களைத் தேசிய முன்னணியின் தலைவரும் துணைப் பிரதமருமான டத்தோ ஶ்ரீ டாக்டர் சாஹிட் ஹமிடி வரும் ஜூலை 29-ஆம் தேதி தொடக்கி வைக்கவுள்ளதாக  டாக்டர் அஷ்ராஃப் குறிப்பிட்டார்.

மேலும், இந்த இடைத்தேர்தலுக்கான பிரச்சாரங்களில் ம.சி.ச.வும் ம.இ.கா.வும் ஈடுபடும் என்று அவர் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)