பொது

வங்காளதேசத்தில் உள்ள மலேசியர்களை அரசாங்கம் திரும்ப அழைத்து வரும்

22/07/2024 04:56 PM

புத்ராஜெயா, 22 ஜூலை (பெர்னாமா) -- இதனிடையே, வங்காளதேசத்தில் உள்ள 124 மாணவர்கள் உட்பட மலேசியர்களை அரசாங்கம் திரும்ப அழைத்து வரும் என்று வெளியுறவு அமைச்சர், டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான் கூறியுள்ளார்.

வங்காளதேசத்தில் நிலவும் பதற்றமான சூழல் விரைவில் முடிவுக்கு வரும் என்று அரசாங்கம் எதிர்பார்க்காததால் மலேசியர்களைத் திரும்ப அழைத்து வருவதே சிறந்த வழி என்றும் முஹமட் ஹசான் தெரிவித்தார்.

"தற்போது நாங்கள் செய்த மதிப்பீட்டின்படி, வங்காளதேசத்தில் உள்ள நம் மாணவர்கள் மற்றும் அங்கு பணிபுரியும் மலேசியர்கள் மற்றும் டாக்காவில் உள்ள மலேசியத் தூதரகத்தில் உள்ள ஊழியர்களின் குடும்பத்தினரை மீண்டும் அழைத்து வருவதற்கான வெளியேற்றத் திட்டத்தை நாம் நடைமுறைப்படுத்துவோம்", என்றார் அவர்.

அரசாங்கம், ஏர் ஆசியா விமான நிறுவனத்துடன் இணைந்து 350 பயணிகள் திறன் கொண்ட சிறப்பு விமானம் மூலம் மலேசியர்களை அழைத்து வரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

உள்ளூர் நேரப்படி செவ்வாய்கிழமை காலை 10 மணிக்கு, டாக்கவில் உள்ள ஹஸ்ரத் ஷாஜலால் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து அச்சிறப்பு விமானம் புறப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)