பொது

அவதூறு கருத்துகள் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

22/07/2024 05:10 PM

ஷா ஆலம், 22 ஜூலை (பெர்னாமா) -- சிலாங்கூர் மந்திரி புசார் நியமனம் மற்றும் ஒருமைப்பாட்டு அரசாங்கம் அமைக்கப்பட்டது தொடர்பில் அரசியல் கூட்டமொன்றில் அவதூறு கருத்துகளை வெளியிட்டதற்காக இரு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருக்கும்  டத்தோ ஶ்ரீ முஹமட் சனுசி முஹமட் நோர் சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தம் மீதான குற்றச்சாட்டுகளைக் கைவிடும்படி இரண்டாவது பிரதிநிதித்துவ விண்ணப்பத்தைக் கெடா மந்திரி புசாரான முஹமட் சனுசி சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, இன்று தொடங்கவிருந்த அவ்விசாரணையை நீதிபதி டத்தோ அஸ்லாம் சைனூடின் ஒத்திவைத்தார்.

கடந்த வாரத்தில் தமது தரப்பு, தேசிய சட்டத்துறையிடம் அந்த பிரதிநிதித்துவ விண்ணப்பத்தை அனுப்பியிருப்பதை வழக்கறிஞர் அவாங் அர்மடாஜய அவாங் மஹ்மூட் நீதிமன்றத்திடம் அறிவித்ததைத் தொடர்ந்து, நீதிபதி அஸ்லாம் அதற்கு அனுமதியளித்தார்.

கடந்த மே மாதத்தில், ஜெனரி சட்டமன்ற உறுப்பினரான முஹமட் சனுசி, முதலாவது பிரதிநிதித்துவ விண்ணப்பத்தைத் தேசிய சட்டத்துறையிடம் அனுப்பியிருந்தார்.

இதனிடையே, பிரதிநிதித்துவ விண்ணப்பத்தைத் தமது தரப்பு பெற்று விட்டதை உறுதிப்படுத்திய அரசு தரப்பு துணை வழக்கறிஞர் டத்தோ மஸ்ரி டாவுட், அதனை ஆய்வு செய்ய கால அவகாசம் தேவை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இருப்பினும், இன்றைய விசாரணையை ஒத்திவைப்பதற்கான விண்ணப்பத்தையும் அவர் எதிர்க்கவில்லை.

அதனைத் தொடர்ந்து, வழக்கு விசாரணையின் மறுசெவிமடுப்பை செப்டம்பர் 27-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)