பொது

நூர் ஃபாரா கொலை; சந்தேக நபரின் தடுப்பு காவல் மேலும் ஏழு நாட்களுக்கு நீட்டிப்பு

22/07/2024 05:18 PM

கோலா குபு பாரு, 22 ஜூலை (பெர்னாமா) -- சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகம் உப்சியின் முன்னாள் மாணவி நூர் ஃபாரா கார்த்தினி அப்துல்லாவின் கொலை வழக்குத் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆடவரின் தடுப்பு காவல், மேலும் ஏழு நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

சிலாங்கூர், கோலா குபு பாரு மாஜிஸ்திரெட் நீதிமன்றத்தில் போலீசார் செய்த விண்ணப்பத்தைச் செவிமடுத்த பின்னர், நீதிபதி நூரூல் மர்டியா முஹமட் ரெட்சா, நாளை தொடங்கி ஜூலை 29-ஆம் தேதி வரையில் தடுப்புக் காவலை நீட்டிக்க உத்தரவைப் பிறப்பித்தார்.

இன்று காலை மணி 9.04 அளவில், 26 வயதான அவ்வாடவரைப் போலீசார் நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வந்தனர்.

இதனிடையே, குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 302-இன் கீழ் விசாரிக்க, இன்று வரையில் தடுப்புக் காவலில் வைக்க முன்னதாக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

கடந்த 15-ஆம் தேதி, உலு சிலாங்கூர், கம்போங் ஶ்ரீ கிளேடாங்கில் உள்ள செம்பனை தோட்டம் ஒன்றில் பலியான நூர் ஃபாரா கார்த்தினியின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக பெர்னாமா செய்தி வெளியிட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து, லான்ஸ் கோப்ரலாக பணிபுரிந்த அச்சந்தேக நபர் அதே நாளில் கைது செய்யப்பட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)