பொது

லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட போலீஸ் அதிகாரி மறுத்து விசாரணை கோரினார்.

22/07/2024 08:38 PM

அலோர் ஸ்டார், 22 ஜூலை (பெர்னாமா) --  இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், சுமார் நாற்பது ஆயிரம் ரிங்கிட் லஞ்சம் கேட்டு வாங்கியதாக நம்பப்படும் கோப்ரல் அந்தஸ்த்தில் உள்ள போலீஸ் அதிகாரி ஒருவர், இன்று அலோர் ஸ்டார் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மறுத்து விசாரணைக் கோரினார். 

நீதிபதி ந. பிரிசிலா ஹெமமாலினி முன்னிலையில், அம்மூன்று குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டபோது, குற்றம் சாட்டப்பட்ட சசாலி லொக்மான் மறுத்து விசாரணைக் கோரினார்.

1952-ஆம் ஆண்டு போதை பொருள் சட்டம் செக்‌ஷன் 39பி-இன் கீழ், போலீசாரால் கைது செய்யப்பட்ட 29 வயதுடைய நபரின் குற்றப் பிரிவைக் குறைக்க உதவும் பொருட்டு அம்மூன்று குற்றங்களையும் தாம் செய்ததாக, அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பர் 29-ஆம் தேதி ஒரு தனிநபரிடமிருந்து நாற்பது ஆயிரம் ரிங்கிட் லஞ்சம் கேட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. 

இரண்டாவது குற்றச்சாட்டின் படி,  அவர் 10 ஆயிரம் ரிங்கிட் லஞ்சம் வாங்கியதாக கூறப்பட்டுள்ளது. 

இதனிடையே, கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி தாம் ஒன்பதாயிரம் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாக மூன்றாம் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. 

2009-ஆம் ஆண்டு மலேசிய ஊழல் எதிர்ப்பு சட்டம் செக்‌ஷன் 16(a)(A)-வின் கீழ், அவர் மீது அம்மூன்று குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)