பொது

வங்காளதேசத்தில் உள்ள 124 மலேசிய மாணவர்கள் தாயகம் அழைத்துவரப்படுவர்

23/07/2024 02:51 PM

கோலாலம்பூர், 23 ஜூலை (பெர்னாமா) -- 124 மாணவர்கள் உட்பட வங்காளதேசத்தில் உள்ள மலேசியர்களைத் திரும்ப அழைத்து வரும் செயல்முறை இன்று நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

350 பயணிகள் கொள்ளளவை கொண்டிருக்கும் ஏர் ஆசியாவின் சிறப்பு விமானம் இன்று காலை வங்காளதேசத்திற்குப் புறப்பட்டதை அடுத்து, அவர்களை அந்நாட்டிலிருந்து வெளியேற்றும் பணிகள் தொடங்கியதாக வெளியுறவு துணை அமைச்சர் டத்தோ முஹமட் அலாமின் தெரிவித்தார். 

வங்காளதேச நேரப்படி காலை மணி 9.20-க்கு டாக்கா, ஹஸ்ராட் ஷாஜலால் (Hazrat Shahjalal) அனைத்துலக விமான நிலையத்தை அச்சிறப்பு விமானம் சென்றடைந்தது. 

அதனைத் தொடர்ந்து, இன்று மாலை மணி 6 அளவில் இரண்டாவது கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம், கே.எல்.ஐ.ஏ 2-இல் அவ்விமானம் தரையிறங்கும் என்றும் அவர் மேலும் கூறினார். 

தேசிய பாதுகாப்பு மன்றத்தின் ஒத்துழைப்புடன் வெளியுறவு அமைச்சு இதன் தொடர்பிலான அனைத்து செயல்முறைகளையும் மேற்கொள்வதாக டத்தோ முஹமட் குறிப்பிட்டார். 

''வங்காளதேசத்தில் உள்ள நம் மாணவர்கள் மற்றும் மக்களின் நலனில் அக்கறை கொள்ள வேண்டும். உரிய கண்காணிப்பு வழங்கப்பட வேண்டிய கடமையில் இதுவும் ஒன்றாகும். மாணவர்கள் மட்டுமல்ல, மற்ற மலேசிய குடிமக்கள் குறிப்பாக வங்காளதேசத்தில் பணிபுரிபவர்களையும் அழைத்து வருவோம். இதில் 10 விமானிகள் தங்கள் குடும்பத்தினருடன் தங்கி அங்குள்ள விமான நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். அவர்களையும் நாட்டிற்கு அழைத்து வருவோம், '' என்றார் முஹமட் அலாமின்.

வங்காளதேசத்தில் மோசமடையும் கலவரத்தைத் தொடர்ந்து அங்குள்ள மலேசியர்களை திரும்ப அழைத்து வரும் செயல்முறையை விரைவுப்படுத்துமாறு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று உத்தரவிட்டிருந்தார்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)