பொது

இஸ்கண்டார் புத்ரியில் காணாமல் போன 6 வயது சிறுமி பத்தாங் காலியில் மீட்பு

23/07/2024 03:32 PM

ஜோகூர் பாரு, 23 ஜூலை (பெர்னாமா) -- கடந்த சனிக்கிழமை இஸ்கண்டார் புத்ரியில் உள்ள ஒரு பேரங்காடியில் காணாமல் போன ஆறு வயது சிறுமி இன்று அதிகாலை சிலாங்கூர், பத்தாங் காலியில் உள்ள மலிவு விலை தங்கும் விடுதியில் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.

புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறை, ஜே.எஸ்.ஜே.என் உதவியுடன் ஜோகூர் மாநில போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத் துறை, ஜே.எஸ்.ஜே அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்று, இன்று அதிகாலை மணி 4.45 அளவில், கடத்தப்பட்ட ஆல்பர்டைன் லியோ ஜியா ஹுய் என்ற சிறுமியைக் காப்பாற்றியதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் எம். குமார் தெரிவித்தார்.

அச்சிறுமியுடன் இருந்த 31 வயதான ஆடவரையும் போலீசார் கைது செய்துள்ளதாக அவர் கூறினார்.

''பாதிக்கப்பட்ட சிறுமி பாதுகாப்பான நிலையிலே இருந்தார். கைது செய்யப்பட்ட ஆடவர் மேலதிக விசாரணைக்காக ஜோகூருக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். மேலும் அச்சிறுமி பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். இவ்விசாரணை தொடர்பில், யாரும் எவ்வித ஊகங்களையும் வெளியிட்டு வழக்கிற்கு இடையூறாக இருக்க வேண்டாம் என்று ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் என்ற அடிப்படையில் பொதுமக்களுக்கு நான் அறிவுறுத்த விரும்புகிறேன்,'' என்றார் குமார்.

அச்சிறுமியை கார் மூலமாக கடத்திச் சென்றதற்கான காரணம் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், கடத்திச் சென்றவர்கள் பிணைப்பணம் கோரி தங்களுக்கு எவ்வித அழைப்பையும் விடுக்கவில்லை என்றும் அவரின் குடும்பத்தார் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இன்று கைது செய்யப்பட்ட அந்த ஆடவரோடு, இச்சம்பவம் தொடர்பில் 28 முதல் 55 வயதிற்குட்பட்ட மொத்தம் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள், அனைவரும் அச்சிறுமிக்கு அறிமுகமில்லாதவர்கள் என்றும் குமார் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில், இஸ்கண்டார் புத்ரியில் நேற்று கைது செய்யப்பட்ட இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களும், இன்று தொடங்கி நான்கு நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 365 மற்றும் 2017-ஆம் ஆண்டு சிறார் பாலியல் குற்றச் சட்டம் செக்‌ஷன் 14 உட்பிரிவு (a)-இன் இவ்வழக்கு விசாரிக்கப்படுவதாகவும் குமார் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)