பொது

கடற்படை அதிகாரி கொலை வழக்கில் ஆறு முன்னாள் மாணவர்களுக்குச் சாகும் வரை தூக்கு

23/07/2024 05:51 PM

புத்ராஜெயா, 23 ஜூலை (பெர்னாமா) --  கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்னர், கடற்படை அதிகாரியான சுல்பர்ஹான் ஒஸ்மான் சுல்கர்னைனைக் கொலைச் செய்ததற்காக, மலேசிய தேசிய தற்காப்புப் பல்கலைக்கழகத்தின் ஆறு முன்னாள் மாணவர்களுக்குச் சாகும் வரை தூக்கிலிடும் தண்டனையை விதித்து மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

அவர்கள் அனைவரும் முன்னதாக எதிர்நோக்கிய குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 302 மீண்டும் மாற்றுவதற்கு அரசுத் தரப்புக்குக் குறுக்கு மேல்முறையீட்டை மேற்கொள்ள நீதிபதி டத்தோ ஹதரியா சைட் இஸ்மாயில்   தலைமையிலான மூவர் கொண்ட நீதிபதி குழு அனுமதித்ததைத் தொடர்ந்து இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

முஹமட் அக்மால் சுஹைரி அஸ்மால், முஹமட் அசாமுடீன் மட் சோஃபி, முஹமட் நஜிப் முஹமட் ரசி, முஹமட் அஃபிப் நஜ்முடின் அசஹாத், முஹமட் சொபிரின் சப்ரி மற்றும் அப்தோல் ஹகீம் முஹமட் அலி  
ஆகியோரே அந்த அறுவராவர்.

தொடக்கத்தில் இக்கொலை வழக்கு குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 302-இன் கீழ் பதிவாகியது.

பின்னர், உயர்நீதிமன்ற நீதிபதி அவ்வழக்கை அது அதேச் சட்டம் செக்‌ஷன் 304 (A)-இன் கீழ் மாற்றியது தவறு எனும் நிலையில் ஏகமனதாக இத்தீர்ப்பு வழங்கப்பட்டதாக நீதிபதி ஹதரியா தெளிவுப்படுத்தினார்.

2017-ஆம் ஆண்டு மே 22-ஆம் தேதி அதிகாலை மணி 4.45-இல் இருந்து அதிகாலை மணி
5.45-க்குள் யு.பி.என்.எம், ஜெபாட் மாணவர் தங்கும் விடுதியில் அவர்கள் அனைவரும் இஸ்திரி பெட்டியால் உடம்பில் சூடு வைத்து சுல்பர்ஹானைத் துன்புறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டது.

2017-ஆம் ஆண்டு ஜூன் முதலாம் தேதி, செர்டாங் மருத்துவமனையில்  சுல்பர்ஹான் உயிரிழந்தான்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)